வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

அரை நிர்வாண கோலத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் இருவர் அழைத்து வருகின்றனர். பின்னணியில் எஸ்டிபிஐ கொடி உள்ளது.

நிலைத் தகவலில், "வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்த சல்மான் என்பனை போலிசார் கைது செய்தனர்!" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Suresh Babu என்பவர் 2020 பிப்ரவரி 18 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் என்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இந்த படத்தைப் பார்க்கும்போது வண்ணாரப்பேட்டை போல தெரியவில்லை. வண்ணாரப்பேட்டை சாலைகள் இவ்வளவு அகன்றதாக இருக்காது. போலீசாரைப் பார்க்கும்போது தமிழக போலீஸ் போல இல்லை. கமெண்ட் பகுதியில் சிலர் இது கேரளாவில் நடந்தது, கேரள போலீஸ் என்று குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் தொடர்பான செய்தி நமக்கு கிடைத்தது.

கொல்லத்தில் பா.ஜ.க நடத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கல் வீச்சில் ஈடுபட்டதாகவும். போலீசார் தடியடி நடத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகமது ஷான் என்பவரை அரை நிர்வாணமாக கைது செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பான செய்திகள், சமூக ஊடக பதிவுகள் நமக்கு கிடைத்தன.

janmabhumidaily.comArchived Link 1
keralanewstoday.inArchived Link 2

இதன் மூலம் கேரளாவில் கொல்லம் பகுதியில் எடுக்கப்பட்ட வேறு ஒரு நிகழ்வின் படத்தை எடுத்து, வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் என்று தவறான தகவலை சேர்த்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர்!- ஃபேஸ்புக் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False