
இந்து என்ற ஒரு மதமே தமிழ் மண்ணில் இல்லாமல் செய்வதே திமுகவின் முக்கிய குறிக்கோள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை யாரோ ஒருவர் ஷேர் செய்ய, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். நியூஸ் கார்டில், “இந்து என்ற ஒரு மதமே தமிழ் மண்ணில் இல்லாமல் செய்வதே திமுகவின் முக்கிய குறிக்கோள் – திமுக எம்.பி., ராசா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக வில் உள்ள இந்துக்களே இதை பார்த்தாவத திருந்துங்க..!” என்று கமெண்ட் செய்யப்பட்டிருந்தது.
இந்த பதிவை Prem DhanaSekar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க என்று காட்டத் தொடர்ந்து பொய்யான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளன. அவற்றைப் பற்றி ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டு வந்துள்ளோம். தற்போது, இந்து மதத்தை அழிப்பதே திமுக-வின் குறிக்கோள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியதாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் மற்றும் வடிவமைப்பு வழக்கமாக தினமலர் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும், ஆ.ராசா இப்படி கூறியிருந்தால் அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும். அவர் பேச்சு தனி வீடியோவாக பாஜக ஆதரவு ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டிருக்கும். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ள புகைப்படத்துடன் தினமலர் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று கிடைத்தது. “ஹிந்துக்களுக்கு எதிராக ஆ.ராசா கக்கிய விஷம்: மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று விஷமம்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அதிலும் கூட “ஹிந்துக்களுக்கு ராசா எதிரியா? கருணாநிதி எதிரியா? ஹிந்துக்களுக்காக உச்சநீதிமன்றத்தில் போராடி இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுக.,வும், திராவிடர் கழகமும்தான்” என்று அவர் பேசியதாக குறிப்பிட்டிருந்தனர்.

தினமலரில் இந்த நியூஸ் கார்டு வெளியானதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். சமீபத்தில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. எனவே, அதன் அலுவலக எண்ணைத் தொடர்புகொண்டு ஆசிரியர் குழுவின் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். அவருக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ்அப்-ல் அனுப்பினோம். நியூஸ் கார்டை பார்த்த அவர் இது போலியான நியூஸ் கார்டு. தினமலர் இதை வெளியிடவில்லை என்றார். இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்து என்ற ஒரு மதமே தமிழ் மண்ணில் இல்லாமல் செய்வதே திமுகவின் முக்கிய குறிக்கோள் என்று ஆ.ராசா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இந்து மதத்தை இல்லாமல் செய்வதே திமுக-வின் குறிக்கோள் என்று ஆ.ராசா கூறினாரா?
Written By: Chendur PandianResult: False
