
சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் எஸ்.வி.சேகர் கோஷ்டியினருக்கும், எச்.ராஜா கோஷ்டியினருக்கும் பயங்கர மோதல் என்று ஒரு பிரேக்கிங் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சன் நியூஸ் டி.வி நேரடி ஒளிபரப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் கோஷ்டிக்கும், எச்.ராஜா கோஷ்டிக்கும் பயங்கர மோதல்! போலீஸ் குவிப்பு! கமலாலயத்தில் பதற்றம்!” என்று இருந்தது.
எப்போது இந்த செய்தி வெளியானது என்று குறிப்பிடவில்லை. இந்த புகைப்படத்தை, facebook DMK என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Royapuram Khadhar Chennai என்பவர் செப்டம்பர் 3, 2019 அன்று பதிவிட்டிருந்தார். 2500-க்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்திருந்தனர்.
உண்மை அறிவோம்:
தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து யார் அடுத்த தலைவராக வருவார் என்று தமிழக ஊடகங்களில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். எச்.ராஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா, முன்பு தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் அல்லது சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர் பதவி அளிக்கப்படுமா என்று பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர். அதேபோல், சமூக ஊடகங்களிலும் எச்.ராஜாதான் தலைவராக வர வேண்டும், எஸ்.வி.சேகரை நியமிக்க வேண்டும் என்று ஆளாளுக்கு ஒரு கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், எஸ்.வி.சேகர் கோஷ்டிக்கும் எச்.ராஜா கோஷ்டிக்கும் இடையே பயங்கர மோதல் என்று சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நகைச்சுவைக்காக இந்த பதிவு வெளியிட்டது போல இல்லை. இந்த ஒரு பதிவு மட்டும் 2500-க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டு இருந்தது. சிலர் இது தவறான தகவல் என்று குறிப்பிட்டாலும் பலரும் இதை வரவேற்றுப் பதிவிட்டிருந்தனர்.
எஸ்.வி.சேகர் மற்றும் எச்.ராஜா ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏதும் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். இது தொடர்பாக கூகுளில் தேடியபோது எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

சன் நியூஸ் பிரேக்கிங் செய்திகள் அசலானது போல தெரியவில்லை. எடிட் செய்யப்பட்டது போல இருந்தது. சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியாகும் காட்சியை, இந்த ஃபேஸ்புக் பதிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். இரண்டின் ஃபாண்ட்டும் வித்தியாசமாக இருந்தது. மோதல் என்ற செய்தி இருக்கும் வெள்ளைப் பகுதி மட்டும் தனியாக போட்டோஷாப் மூலம் வைக்கப்பட்டது போல இருந்தது. வழக்கமாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் இப்படி வெள்ளைப் பகுதி பாக்ஸில் செய்தியைத் தெரிவிக்கும் வழக்கம் இல்லை என்று தெரிந்தது.

பா.ஜ.க-வுக்குள் ஏதும் கோஷ்டி மோதல் உள்ளதா என்று அறிய தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளரும் தமிழ்நாடு பா.ஜ.க இளைஞர் அணி துணைத் தலைவருமான எஸ்.ஜி.சூர்யாவிடம் பேசினோம். “தெலங்கான ஆளுநராக தமிழிசை அவர்கள் நியமிக்கப்பட்ட மகிழ்ச்சியில் கமலாலயத்துக்கு தொண்டர்கள் வந்து செல்கின்றனர். யார் தமிழக பா.ஜ.க-வின் அடுத்த தலைவராக வருவார்கள் என்பதை தேசிய தலைமை அறிவிக்கும். அப்படி இருக்கும்போது, கமலாலயத்தில் கோஷ்டி மோதல் என்று சொல்வது எல்லாம் அசல் வதந்திதான்” என்றார்.

படத்தில் இருப்பவர்: SG Suryah
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆதரவாளர்கள் மோதல் என்று போலியாக சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி கார்டு உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“எச்.ராஜா, எஸ்.வி.சேகர் கோஷ்டி மோதல்?”- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False

இது தவறான செய்தி என்று நான் பகிரும்போதே தெரியும்… ஒரு நாளைக்கு இந்தியா முழுவதும் பிஜேபி மற்றும் அதை சார்ந்த கட்சிகள் இலட்சக்கணக்கான பொய் செய்திகளை பரப்பி வருகின்றன அதையும் கவனித்தால் நலம்