FACT CHECK: போதை மருந்து கடத்தல்- பிரபல மசாலா நிறுவனத்திற்கு சிக்கல் என பரவும் வதந்தி!

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளதாகவும், இதனால் பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனம் சிக்கலில் உள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

வாசகர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதில், “சிக்கலில் ஆச்சி நிறுவனம்? ஆச்சி – மசாலா தூள் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த 30 லட்சம் மதிப்புள்ள சூடோ பீட்ரின் என்ற போதை பொருளை பறிமுதல் செய்தது சுங்கத்துறை” என்று இருந்தது. துக்ளக் வாசகர் குழுவில் ஜெயஶ்ரீராம் என்பவர் ஷேர் செய்திருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதே பதிவை FRIENDS OF TN BJP என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Nateshkumar S Pillai‎ பகிர்ந்திருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மசாலா தயாரிப்பு நிறுவனமே போதை மருந்தை கடத்தியது போன்ற தோற்றத்தை இந்த பதிவு உருவாக்கியுள்ளது. உண்மையில் அந்த நிறுவனத்துக்கு இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தாலே அது பற்றி எல்லா ஊடகங்களிலும் அல்லது குறைந்தது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில ஊடகங்களிலாவது செய்தி வந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வந்ததாக நினைவில்லை இல்லை. ஆனால், சமூக ஊடகங்களில் பலரும் இதை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். அப்போது, ஸீ நியூஸ் தமிழில் வெளியான செய்தி நமக்கு கிடைத்தது. அதில், “சென்னையில் மசாலா பாக்கெட்டில் மறைத்து வைத்து போதைப் பொருள் கடத்தல்: 4 பேர் கைது!” என்று தலைப்பிட்டிருந்தனர். செய்தியில், “ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவிருந்த பிராண்டட் ‘மசாலா’ பாக்கெட்டுகள் அடங்கிய கூரியரில் இருந்து ரூ .30 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அசல் பதிவைக் காண: zeenews.india.com I Archive

பார்சலின் சரக்குதாரர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் பார்சல் ஆஸ்திரேலியாவின் (Australia) நியூ சவுத் வேல்ஸ், ஆபர்னுக்கு அனுப்ப விருந்தது. எனினும், அதிகாரிகளின் தேடல்களிலும் விசாரணையிலும் சென்னையைச் சேர்ந்த 37 வயதான சாதிக் என்பவர்தான் இந்த கடத்தலின் சூத்திரதாரி என்றும், சரக்கு முகவரி தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று இருந்தது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களின் படங்களையும் வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பாக சென்னை சுங்கத் துறையைத் தொடர்புகொண்டு பேசினோம். இது தவறான தகவல் என்ற அவர்கள், இதுபற்றி ட்விட்டரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதைத் தேடிப் பார்த்தோம். 

https://twitter.com/ChennaiCustoms/status/1315976677189591041

Archive

அதில், “சென்னை விமான நிலைய சுங்கத்துறை: மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg சூடோஎஃபிட்ரின் எனப்படும் போதைப்பொருளை கூரியர் முனையத்தில் NDPS சட்டப்படி கைப்பற்றியது. பிரதான குற்றவாளியுடன் 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் பிடிபட்டது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆங்கிலத்தில் வெளியான பதிவில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர். 

https://twitter.com/ChennaiCustoms/status/1316023976611594241

Archive

இதுதொடர்பாக, ஆச்சி நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய உயர் அதிகாரி ஒருவர் “இது தவறான தகவல். யாரோ எங்கள் நிறுவன மசாலா பாக்கெட்டை பயன்படுத்தி கடத்தினார்கள் என்பதற்காக நிறுவனத்தை எப்படி குறை கூற முடியும். இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பாக எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் எங்கள் நிறுவனத் தலைவர் வெளியிட்ட அறிக்கையை பதிவிட்டுள்ளோம்” என்றார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அந்த பதிவைப் பார்த்தோம். அதில், “கடந்த 20 ஆண்டுகளாக மக்களிடையே நன்மதிப்பை பெற்று, உணவுப் பொருட்கள் தயாரிப்பில் சிறப்பாக சேவை செய்து கொண்டிருக்கும், நமது ஆச்சி மசாலாவின் மசாலா பொட்டலங்களை சிலர் சமூக விரோத செயலுக்காக பயன்படுத்தியதை ஆச்சி மசாலா நிறுவனம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. ஏ.டி.பத்மசிங் ஐசக், நிறுவனர் – தலைவர், ஆச்சி மசாலா” என்று குறிப்பிட்டிருந்தது.

நம்முடைய ஆய்வில்,

‘’போதை மருந்து கடத்திய நான்கு தனி நபர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். இந்த கடத்தலில் முக்கிய மூளையாக செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுவிட்டார்,’’ என்று சென்னை சுங்கத் துறை அறிவித்துள்ளது.

மசாலா நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

இதன் அடிப்படையில், ஆச்சி மசாலாவுக்கு சிக்கல் என்று தவறான அர்த்தம் கொள்ளும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவது உறுதியாகிறது.

முடிவு:

போதை மருந்து கடத்தல் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், பிரபல மசாலா நிறுவனத்துக்கு சிக்கல் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:போதை மருந்து கடத்தல்- பிரபல மசாலா நிறுவனத்திற்கு சிக்கல் என பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False