
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழகத்தில் மாநிலங்கள் அவை எம்.பி சீட் வழங்க தி.மு.க மறுத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மு.க.ஸ்டாலின் மற்றும் பழைய திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவி பங்கேற்ற திரைப்பட காட்சியைப் பகிர்ந்துள்ளனர். நடிகை சரோஜா தேவியின் படத்தின் மீது மன்மோகன் என்று எழுதப்பட்டுள்ளது. தமிழக ராஜ்யசபா சீட்டுக்கு மன்மோகன் சிங்கை ஆதரிக்க தி.மு.க தயாராக இல்லை என்று ஸ்டாலின் கூறுவது போல் வெளியிட்டுள்ளனர். அதற்கு மன்மோகன் சிங், “அப்படினா என்ன பார்த்து பொருளாதார புலினு சொன்னதெல்லாம் பொய்யா கோபால்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம், மன்மோகன் சிங்குக்கு ராஜ்யசபா இடம் ஒதுக்க மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.
இந்த பதிவை, SUTTA VADAI சுட்ட வடை என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 2ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி தொகுதி பங்கீடு செய்யும்போது ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு மக்களவைக்கு ஒரு தொகுதியும், மாநிலங்கள் அவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டது. மற்றபடி காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிக்கு மாநிலங்கள் அவை இடம் ஒதுக்கப்படும் என்று எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. இது தொடர்பான செய்திகள்…
இந்தநிலையில், அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் ஜூன் 14ம் தேதியோடு முடிவடைந்தது. ஆனால், அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ-க்கள் இல்லாத காரணத்தால் மன்மோகன் சிங் மீண்டும் அங்கு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
அதே நேரத்தில், தமிழகத்திலும் ஆறு மாநிலங்கள் அவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் நிலவரப்படி தி.மு.க கூட்டணியால் மூன்று இடங்களில் வெல்ல முடியும். அதேபோல், அ.தி.மு.க கூட்டணியால் மூன்று இடங்களை வெல்ல முடியும். இதனால், தி.மு.க-விடம் மன்மோகன் சிங்குக்காக காங்கிரஸ் கட்சி சீட் கேட்குமா என்ற கேள்வி எழுந்தது. தி.மு.க-விடம் சீட் கேட்க காங்கிரஸ் திட்டம் என்று யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வந்தன. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆனால், காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அப்படி எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை. காங்கிரஸ் கட்சி கோரிக்கை ஏதேனும் விடுத்துள்ளதா, இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைமை ஏதாவது பேசியதா என்று ஆய்வு செய்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

Picture Courtesy: ஆ.கோபண்ணா
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணாவை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “அப்படி எந்த ஒரு கோரிக்கையும் தி.மு.க-விடம் நாங்கள் வைக்கவில்லை. இது தவறான தகவல்” என்றார்.
நம்முடைய ஆய்வில்,
மாநிலங்கள் அவை இடம் ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க – ம.தி.மு.க இடையே ஒப்பந்தம் கையெழுத்தான செய்தி கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்கள் அவையில் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்து இரு தரப்பினரும் கையெழுத்திட்டத செய்தி கிடைத்தது. அதில், மாநிலங்கள் அவை இடம் ஒதுக்குவதாக தி.மு.க உறுதி மொழி அளிக்கவில்லை.
மன்மோகன் சிங்குக்கு ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சி கேட்க உள்ளதாக யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியில் கேட்டபோது, காங்கிரஸ் கட்சி தரப்பில் எந்த ஒரு கோரிக்கையும் விடவில்லை. இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்துள்ளனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“மன்மோகன் சிங்குக்கு எம்.பி சீட் மறுத்த தி.மு.க!” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False
