ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான சரோஜ் நாராயணசாமியின் படம் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஆல் இந்தியா ரேடியோவில் செய்திவாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமியின் இன்முகம் காண்போம் என்று குறிப்பிட்டு ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. நீண்ட பதிவில் சரோஜ் நாராயணசாமி பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தது.

இந்த பதிவை ‎தினம் ஒரு தகவல் DAILY INFORMATION என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Priya Durai‎ என்பவர் 2020 அக்டோபர் 16ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அகில இந்திய வானொலியில் தமிழ் செய்தி வாசித்தவர் என்பதால் சரோஜ் நாராயணசாமி மிகவும் பிரபலம். ஆனால், அவர் எப்படி இருப்பார் என்பது பலருக்கும் தெரியாது. அவருடைய பேட்டிகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வந்திருந்தாலும் அவரது முகம் பலருக்கும் பரீட்சயம் இல்லை. இதனால், சரோஜ் நாராயணசாமி இதுதான் என்று வயதானவர்களின் படங்களை எல்லாம் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

சரோஜ் நாராயணசாமியின் படம் இதுதானா என்று தேடினோம். அப்போது சரோஜ் நாராயணசாமி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியை ஒருவர் யூடியூபில் பகிர்ந்திருந்ததைக் காண முடிந்தது. அதில் அவர் கணீர் குரலோடு "நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது ஆகாசவாணியின் செய்தியறிக்கை" என்று கூறினார்.

தொடர்ந்து அவருடைய புகைப்படங்கள் கிடைக்கிறதா என்று தேடியபோது விகடன், குங்குமம் உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அவருடைய புகைப்படங்கள் இருப்பதைக் காண முடிந்தது. இந்த பேட்டிகளில் இடம் பெற்ற தகவல்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இருந்தது. எனவே, பதிவில் உள்ள தகவலில் பிரச்னை இல்லை.

அசல் பதிவைக் காண: k ungumam.co.in I Archive 1 I vikatan.com I Archive 2

சரோஜ் நாராயணசாமி ஃபேஸ்புக் பக்கத்தில் இருக்கிறாரா என்று தேடியபோது, அவருடைய பெயரில், படத்துடன் சில ப்ரொஃபைல்கள் இருந்தன. ஒன்றில் அவருடைய குடும்பத்தினர் படங்கள் நிறைய இருந்தன. அதனால் அது அவருடைய பக்கமாக இருக்கலாம் என்று தெரிந்தது. இதன்மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் இருப்பவர் சரோஜ் நாராயணசாமி இல்லை என்பது உறுதியானது.

அப்படி என்றால் இவர் யார் என்ற கேள்வி எழுந்தது. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, தினமலரில் இவரைப் பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. சென்னையில் முதன் முதலாக ஆதரவற்ற பெண்களுக்கான முதியோர் இல்லம் தொடங்கி சேவை புரிந்துவந்த சாவித்ரி அம்மா என்று தெரிந்தது. அவர் 2020 அக்டோபர் 10ம் தேதி காலமானதைத் தொடர்ந்து, இவருடைய படத்துடன் 2020 அக்டோபர் 12ம் தேதி தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive

சாவித்ரி அம்மாவின் படத்தை எடுத்து சரோஜ் நாராயணசாமி என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இதுதான் சரோஜ் நாராயணசாமியின் என்று பகிரப்படும் படம் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
சரோஜ் நாராயணசாமியின் படம் என்று மறைந்த சமூக சேவகி சாவித்ரி அம்மாவின் படம் பகிரப்பட்டிருப்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இது சரோஜ் நாராயணசாமி படம் இல்லை!

Fact Check By: Chendur Pandian

Result: False