
பீகார் மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவனை என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரி பூஜா என்று நடிகை தபு படத்தை பலர் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நடிகை தபுவின் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பீகாரில் சிறுமியை கற்பழித்து கொன்றவனை சிறைக்கு கொண்டு செல்லாமல் அந்த இடத்திலேயே எங்கவுண்டர் செய்து சுட்டு கொன்ற அதிகாரி பூஜாவுக்கு ஒரு லைக் உண்டா?? பாராட்ட நினைத்தால் ஷேர் பன்னுங்க மக்களே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை கவிதன் வரதன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 😎என் மனைவி என் உயிர் தோழி 😍AVR என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 13, 2021 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகார் மாநில போலீஸ் அதிகாரி என்று நடிகை தபு படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த தகவலுக்கும் சூப்பர், வாழ்த்துக்கள் என்று ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது. இந்த ஒரு பதிவு மட்டுமல்ல, இதைப் போல பலரும் சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் படத்தில் உள்ளது நடிகை தபு என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, இந்தியா டைம்ஸ் என்ற இணையத்தில் திரிஷ்யம் படத்தில் நடிகை தபு என்று குறிப்பிட்டு இந்த படத்தை பகிர்ந்திருந்தனர்.

அசல் பதிவைக் காண: indiatimes.com I Archive 1 I imdb.com I Archive 2
அடுத்ததாக, பீகாரில் பூஜா என்று யாரும் ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளாரா, அவர் பாலியல் பலாத்காரம் செய்த நபரை என்கவுண்டர் செய்தாரா என்று தேடினோம். அப்போது, சமூக ஊடகங்களில் பூஜா யாதவ் என்று ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி படத்தை பலரும் ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது. அதிலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போலவே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை சுட்டுக்கொன்ற ஐ.பி.எஸ் அதிகாரி பூஜா என்று குறிப்பிட்டிருந்தனர்.

அந்த படத்தில் உள்ள அதிகாரியைப் பற்றி தேடினோம். அவர் உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றி வரும் பூஜா யாதவ் என்று தெரிந்தது. தற்போது (2021 ஏப்ரல்) அவர் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பணியாற்றி வருவதாக அம்மாநில போலீஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: uppolice.gov.in I Archive
பூஜா யாதவ் ராஜஸ்தான் மாநில ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது திருமணம் ஆன பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தற்கொலை செய்துகொண்ட பெண் திருமணத்துக்குப் பிறகு வேறு ஒரு ஆணுடன் பேசி வந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு திருமண வாழ்வில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது என்று கருத்து கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதன் பிறகு அவர் உத்தரப்பிரதேசத்துக்கு மாற்றல் பெற்று வந்துவிட்டார் என்று செய்தி கிடைத்தது. என்கவுண்டர் செய்தார் என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: patrika.com I Archive
உண்மையில் உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்த நபரை அஜய் பால் ஷர்மா என்ற அதிகாரி என்கவுண்டர் செய்ததாக முன்பு சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரல் ஆனது. ஆய்வு செய்ததில் அது உண்மை என்பதும் தெரியவந்தது. அந்த பதிவை வைத்து ஆளாளுக்கு தங்களுக்கு பிடித்த படத்தை எடுத்து தவறான தகவல் சேர்த்து பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.
தமிழ் நடிகைகள் நிவேதா பெத்துராஜ், நமீதா ஆகியோர் போலீஸ் உடையில் இருக்கும் படத்தை வைத்தும் கூட இதே போன்று பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆனதை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இதன் மூலம் பீகாரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை சுட்டுக் கொன்ற ஐ.பி.எஸ் அதிகாரி என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பீகாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரி என்று பகிரப்படும் படத்தில் இருப்பது நடிகை தபு என்பதும், பூஜா யாதவ் என்ற அதிகாரி பீகாரில் பணியாற்றவில்லை, அவர் உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பாலியல் குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி என்று கூறி பரவும் நடிகை தபு படம்!
Fact Check By: Chendur PandianResult: False
