
பழநி பஞ்சாமிர்த டீலர் மகள் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பழநி முருகன் மற்றும் பழனி பஞ்சாமிர்த டீலர் மகள் என்று இரண்டு படங்களை ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளனர். இல்லாத கடவுளை வைத்து இருக்கப்பட்டவன் கொள்ளையடிக்கிறான் என்று அதன் மேல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Seran Senguttuvan என்பவர் 2021 ஜூலை 1ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பழநி பஞ்சாமிர்த டீலர் மகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படம் மிகச் சிறியதாக உள்ளது. அவருக்கு அருகில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன் உள்ளார். மேலும் ஏதோ திறப்பு விழா போலவும் தெரிகிறது. அப்படி என்றால் நீதிபதி கர்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து கல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்ட 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு முந்தையதாக இந்த விழா நடைபெற்று இருக்க வேண்டும்.
எனவே, இந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கர்நாடக மாநில பா.ஜ.க கட்சி சார்பில் அமைச்சராக பதவி வகித்தவரும் சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மகள் திருமண புகைப்படங்களுடன் இந்த புகைப்படம் வைத்து சில பதிவுகள் வெளியாகி இருந்தன. ட்விட்டரில் சிலர் இந்த பெண் திருப்பதி லட்டு தயாரிப்பு டீலரின் மகள் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது.
Archive I indiaherald.com I Archive
இவற்றுக்கு இடையே pinterest.com-ல் தமிழ் நாடக நடிகை வாணி போஜன் என்று குறிப்பிட்டு tamilglitz.in இந்த படத்தை வெளியிட்டிருப்பது தெரிந்தது. tamilglitz.in வெளியிட்டிருந்த படம் சற்று பெரிதாக இருந்தது. நகை அணிந்திருந்த பெண்ணின் முகம் சரியாகத் தெரிந்தது. அது வாணி போஜன் தான் என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: pinterest.com I Archive
வாணி போஜன் நகை அணிந்திருக்கும் படத்தை தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளாரா என்று பார்த்தோம். அப்படி எந்த படமும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ளது போன்று பச்சை நிற புடவை அணிந்து ஜூவல்லரி போட்டோஷூட் என்று 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் படம் ஒன்றை அவர் வெளியிட்டிருப்பது நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நம்முடைய ஆய்வில் பழநி பஞ்சாமிர்த டீலர் மகள் என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதே படத்தை திருப்பதி லட்டு டீலர் மகள் திருமணம் என்றும், கர்நாடகாவின் சுரங்க அதிபரும் முன்னாள் மாநில அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி மகள் திருமண காட்சி என்றும் பலரும் செய்தி, சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை காண முடிகிறது.

படத்தில் இருக்கும் பெண் தமிழ் சீரியல் நடிகை வாணி போஜன் என்று tamilglitz தெரிவித்துள்ளது. வாணி போஜன் புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பெண் வாணி போஜன் என்பதை தீர்மானிக்க முடிகிறது. இதன் அடிப்படையில், பழநி பஞ்சாமிர்த டீலரின் மகள் என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பழநி பஞ்சாமிருத டீலர் மகள் என்று பகிரப்படும் படம் டி.வி சீரியல் நடிகை வாணி போஜனுடையது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
