
உத்தரப்பிரதேசம் யமுனா விரைவு சாலையில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி கீழே ஸ்டிரெச்சருடன் கீழே விழுந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து ஸ்டிரெச்சரில் நோயாளி கீழே சாலையில் விழுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யமுனா விரைவு சாலையில் . . . . . .
பாஜக சர்க்கார் லட்சணம் பாருங்கள்😭😭😭😭😭😭😭
வீட்டிலிருந்து எப்படி இருந்தாலும் சுடுகாட்டுக்கு தான் போகப் போகிறாய் இடையில் எதற்கு ஆஸ்பத்திரி நேரா சுடுகாட்டுக்கு போ என்று ஷார்ட்கட் காண்பிக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து நோயாளி ஒருவர் கீழே விழுந்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலத்தில் இப்படி ஒரு நிலைமை என்று பலரும் விமர்சித்து இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த சம்பவம் தமிழ்நாட்டின் கோவையில் நடந்ததாக பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவை பார்க்கும் போதே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆம்புலன்சில் ஒரு கதவு இல்லை. சாலை சரியாக இல்லை. நோயாளி விழும் போது ஆக்சிஜன் மாஸ்குடன் விழுகிறார். ஆனால், ஆம்புலன்சில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் விழவில்லை. அப்படி இருக்க ஆக்சிஜன் மாஸ்க் மட்டும் கழன்று விழாமல் நோயாளியுடன் வந்துள்ளது.

பொதுவாக ஆம்புலன்சின் முகப்பு பகுதியில் தான் ஆம்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை திருப்பி எழுதியிருப்பார்கள். வாகனங்களில் செல்பவர்கள் பக்கவாட்டு கண்ணாடியைப் பார்க்கும் போது படிக்க வசதியாக இருக்க இப்படி எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்த வாகனத்தின் பின்பக்கத்தில் அப்படித் திருப்பி எழுதியுள்ளனர்.
நோயாளியின் உடன் யாரும் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் இயக்கப்படாது. மிக அவசரம் என்றால் கூட குறைந்தபட்சம் மருத்துவ பணியாளர் ஆவது உடன் இருப்பார். அப்படி இருந்திருந்தால் ஆம்புலன்சில் இருந்த கீழே விழுந்ததும் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்திருப்பார்கள். இதில் அப்படி யாரும் இல்லை.

சாலையில் விழுந்ததும் எந்த அதிர்ச்சியும் இன்றி அசைவற்று நோயாளி இருக்கிறார். சாலையில் விழுந்த ஸ்டிரெச்சரின் சக்கரம் நேராக செல்கிறது. ஆனால், ஸ்டிரெச்சர் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் செல்கிறது. இவை எல்லாம் இந்த வீடியோ உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
இருப்பினும் ஆதாரங்கள் அடிப்படையில் இந்த வீடியோ போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். இப்படி ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அல்லது கோவையில் நடந்ததா என்று தேடிப் பார்த்தோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸ் தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிந்த சென்னை வடபழனி பி அண்டு ஜி மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ப்ரீத்தம் கிருஷ்ணமூர்த்தியிடம் இந்த வீடியோ தொடர்பாக பேசினோம்.
அப்போது அவர், “பொதுவாக நோயாளி உடன் உறவினர், நண்பர் என அட்டென்டர் ஒருவருடன் தான் ஆம்புலன்ஸ் இயக்கப்படும். அவசர சிகிச்சை தேவைப்படும் சூழலில் மருத்துவ பணியாளரும் நோயாளியுடன் பின்னால் தான் அமர்ந்திருப்பார். ஆம்புலன்சின் கதவு வெளிப்புறமாக பூட்டப்படும். அதனால், உள்ளே இருந்து யாரும் எளிதாக வெளியே வந்துவிட முடியாது. வாகனத்திற்குள் ஸ்டிரெச்சர் பிரத்தியேகமான முறையில் லாக் செய்யப்படும். அதனால், அது அசையாது, கீழே விழாது.

ஆனால் இந்த வீடியோவில் ஒரு கதவே இல்லை. மேலும் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்கள் எதுவும் இல்லை. ஆக்சிஜன் சிலிண்டர் ஸ்டிரெச்சருடன் இருக்காது. அது ஆம்புலன்ஸ் வாகனத்தில் தனியாக இருக்கும். ஒருவேளை கதவு எதிர்பாராத விதமாக திறந்து, ஸ்டிரெச்சர் லாக் விலகி, உடன் வந்தவர்கள் கவனிக்காமலிருந்து நோயாளி ஸ்டிரெச்சருடன் சாலையில் விழுந்தாலும் கூட ஆக்சிஜன் மாஸ்க் கழன்றிருக்கும். ஆனால், வீடியோவில் அப்படி நடக்கவில்லை. இந்த வீடியோவில் உள்ளது போன்று நடக்க வாய்ப்பில்லை” என்றார்.
இந்த வீடியோவை ஏஐ வீடியோ காட்சிகளைக் கண்டறிய உதவும் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். அவையும் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆம்புலன்சில் இருந்து நோயாளி கீழே விழுந்ததாக பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:பாஜக ஆட்சியில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி கீழே விழுந்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Altered


