
ஹவாய் தீவை சுனாமி தாக்கி அழித்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தீவு நகரை சுனாமி தாக்கி அழித்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. விமானநிலையம், குடியிருப்பு, சாலைகள், கடற்கரை எல்லாம் சுனாமி தாக்குதலில் அழிந்து போனது போன்று காட்சிகள் வருகின்றன.
நிலைத் தகவலில், “ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்.!🌊🌊🌊
பல்வேறு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை…!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ரஷ்யாவில் ஏற்பட்ட பயங்கர சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்த சமூக ஊடகங்களில் மக்களை பீதி அடைய வைக்கும் வகையில் பல பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. பொதுவாக இயற்கை பேரிடர், போர், பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போதெல்லாம் பழைய வீடியோக்களை, புகைப்படங்களை பதிவிட்டு பீதியை ஏற்படுத்துவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை பல அடுக்கு மாடி கொண்ட கட்டிடத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு அலை எழுந்தது போன்று காட்டப்படுகிறது. அப்படி பயங்கர சுனாமி ஏற்பட்டிருந்தால் ஹவாய் தீவுகள் மட்டுமல்ல, பல நாடுகள் அழிந்து போயிருக்கும். மேலும், வீடியோவின் பல காட்சிகளும் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இதே வீடியோவை 2025 மார்ச் 29ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல் என்று குறிப்பிட்டு சிலர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ரஷ்யா நிலநடுக்கத்திற்குக் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு முன்பாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இது ரஷ்ய நிலநடுக்கத்தின் போது பதிவான காட்சி இல்லை என்பது உறுதியானது.
அடுத்ததாக இந்த வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி hivemoderation.com என்ற ஏஐ வீடியோ, புகைப்படங்களை கண்டறிய உதவும் இணையதளத்தில் பதிவேற்றித் தேடினோம். அதில் இந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதுதான் என்பது உறுதியானது.
தொடர்ந்து இந்த வீடியோ பற்றித் தேடிக் கொண்டிருந்த போது மார்ச் 10, 2025ல் வெளியான ஃபேக்ட் செக் கட்டுரை ஒன்றைக் கண்டோம். அதில், பிரேசிலில் சுனாமி என்று குறிப்பிட்டு இந்த வீடியோ 2025 மார்ச் தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வீடியோவில் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ விமானநிலையம் பாதிக்கப்பட்டிருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. ஆனால், பிரேசிலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுனாமி தாக்குதல் ஏதும் ஏற்படவில்லை என்றும் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியதாக பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
