300 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய சீனர்கள்: உண்மை என்ன?

உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’300 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய சீனர்கள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 
இனி என்றும் அம்மாவின் நினைவில்  

எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவனை சீன தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 300 அடி ஆழம் உள்ள கிணறு எனச் சொன்னாலும், சில நொடிகளில் சிறுவனை உயிருடன் மீட்பதை காண முடிகிறது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுர்ஜித் வில்சன் என்ற சிறுவன், கடந்த அக்டோபர் 25, 2019 அன்று மாலை தனது வீட்டுத் தோட்டத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனை மீட்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், நாளுக்கு நாள் உடல் கீழே இறங்கிச் சென்றதால் 88 அடி ஆழமுள்ள மிகக் குறுகிய ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவனை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. 3 நாட்கள் போராடியும் உயிரோடு காப்பாற்ற முடியவில்லை என்றாலும் பிறகு சடலம் மீட்கப்பட்டதாக, ஊடகங்களுக்கு தகவல் கூறப்பட்டது.

இதுதொடர்பாக புதுப்புது வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து, தவறு என்று நாமும் நிரூபித்திருக்கிறோம். அதில் சில செய்திகளின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

Tamil Fact Crescendo Link 1Tamil Fact Crescendo Link 2

இந்த பரபரப்பு சம்பவத்திற்கு இடையேதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் பகிரப்பட்டுள்ளது. சீனாவில் உள்ளதுபோல உடனடியாகச் செயல்பட்டு தமிழக அரசும் சிறுவன் சுர்ஜித் வில்சனை மீட்டிருக்க வேண்டும் என இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த தகவல் பரவ, முதலில் இந்து குழுமத்தைச் சேர்ந்த Hindu Talkies வெளியிட்ட செய்திதான் குழப்பத்திற்கு காரணம்.

இதில், ‘’300 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை,‘’ எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், சர்ச்சையாக மாறவே, இதனை பின்னர் Hindu Talkies திருத்தம் செய்துகொண்டுவிட்டது.

Facebook Link 

இதன்படி, மேற்கண்ட சிறுவன் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தது உண்மைதான். ஆனால், சுமார் 37 அடி தொலைவிலேயே சிறுவனின் உடல் சிக்கிக் கொண்டுவிட்டது. இதனால், துரித கதியில் செயல்பட்ட சீன மீட்புக் குழுவினர் உடனடியாக சில மணிநேரத்தில் சிறுவனை மீட்டுவிட்டனர்.

குறைந்த ஆழத்திலேயே இந்த சீன சிறுவனின் உடல் தங்கிவிட்டதால், விழுந்த சில மணிநேரத்தில் அவனை மீட்பது எளிதாக அமைந்தது. ஆனால், சுர்ஜித் வில்சன் விவகாரத்தில் உரிய நேரத்தில் மீட்புப் பணி மேற்கொள்ளாமல் விட்டதால், நேரம் செல்ல செல்ல சிறுவனின் உடல் படிப்படியாக அடியாழத்தில் விழுந்துவிட்டது. அதனால்தான், சுர்ஜித்தை மீட்க முடியவில்லை.

ABP News Link Dailymail Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மேற்கண்ட சீன சிறுவன் 300 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்படவில்லை. 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன், சுமார் 37-38 அடி தொலைவிலேயே உடல் சிக்கிக் கொண்டு போராடியுள்ளான். எனவே, அவனை உடனடியாக, சீன மீட்புக் குழு உயிருடன் எளிதாக மீட்டுவிட்டது. இது 2016ம் ஆண்டில் நிகழ்ந்ததாகும்.
2) சுர்ஜித் விவகாரத்தில் நடந்தது வேறு கதை. சிறுவன் முதலில் 20 முதல் 30 அடியாழத்தில் உடல் சிக்கிக் கொண்டு அலறியபோதே துரிதமாகச் செயல்பட்டிருந்தால் மீட்டிருக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் சமயோசிதமாக தமிழக அரசு தரப்பில் செயல்படவில்லை என, சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, நேரம் செல்ல செல்ல சுர்ஜித் உடல் எடை தாங்காமல் ஆழ்துளை கிணற்றின் அடியாழம் வரை சென்றுவிட்டது. 
3) இதுபோன்ற வீடியோக்கள் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் பகிரப்படுவதால் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பயனாளர்கள் முழு உண்மை தெரியாமல் குழப்பத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.
4) சம்பந்தப்பட்ட வீடியோவை முதலில் தவறான தலைப்புடன் பகிர்ந்த இந்து ஊடக குழுமத்தைச் சேர்ந்த Hindu Talkies, பிறகு தனது செய்தியின் தலைப்பை திருத்திக் கொண்டதைக் காண முடிகிறது.

எனவே, நாம் ஆய்வு மேற்கொண்ட வீடியோவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:300 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய சீனர்கள்: உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •