
ரூ. 1.76 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு காட்டிய வேட்பாளர் என தலைப்பிட்டு, அ.ராசா மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு பற்றிய செய்திப் படத்தை இணைத்து, செய்தி வெளியிட்டிருந்தது ஏசியாநெட் தமிழ் இணையதளம். இச்செய்தியின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு.
செய்தி விவரம்:
1,760000000000 கோடி சொத்து மதிப்பு காட்டும் தமிழக வேட்பாளர்…
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அப்போது மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அ.ராசா 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அப்போது செய்தித்தாளில் வெளியான தலைப்புச் செய்தியின் படத்தை வைத்து, 1.76 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு காட்டும் தமிழக வேட்பாளர் என தலைப்பிட்டு, ஏசியாநெட் செய்தி பகிரப்பட்டுள்ளது. ராசாவின் படம் மற்றும் தலைப்பைப் பார்த்த பலரும் அ.ராசா பற்றிய செய்தி இது, என்று நினைத்து ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் 2010ம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க-வைச் சேர்ந்த அ.ராசா. இவரது பதவிக்காலத்தில்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தது. இதில், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பான சிஏஜிஅறிவித்தது. இதை 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று எதிர்க்கட்சிகள் பிரச்னை செய்தன. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு கடந்து வந்த பாதை தொடர்பாக நியூஸ்7 வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதைத் தொடர்ந்து அ.ராசா மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. சி.பி.ஐ போலீசால் கைது செய்யப்பட்ட அ.ராசா, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. அதில், அ.ராசா உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தற்சமயம், நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு தி.மு.க சார்பில் அ.ராசா போட்டியிடுகிறார். இந்த சூழ்நிலையில், 1.76 லட்சம் கோடி சொத்து மதிப்பைக் காட்டும் வேட்பாளர் என்று அ.ராசா படத்துடன் செய்தி வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திக்குள் சென்று பார்த்தால், பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவர் தன்னுடைய கையில் ரொக்கமாக ரூ.1.76 லட்சம் கோடி உள்ளது என்றும் உலக வங்கியில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் கேட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம், ‘’என்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது என்பதை நிரூபிக்கவே, இப்படிச் செய்தேன்,’’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த செய்தியில் சம்பந்தமே இல்லாமல், அ.ராசா படத்தை தலைப்பில் வைத்துள்ளனர். அதுபற்றி செய்தியில் ஒரு வரிகூட தெரிவிக்கவில்லை.
ஃபேஸ்புக்கிலும், ஏசியாநெட் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த செய்தி ஷேர் செய்யப்பட்டுள்ளது. கமெண்டில் பலரும் ஏசியாநெட் தமிழ் இணைய தள செய்திப் பிரிவைத் திட்டித் தீர்த்துள்ளனர். அதன் பிறகும் கூட படத்தை அகற்றவோ அல்லது அது தொடர்பான செய்தியை சரி செய்யவோ ஏசியாநெட் தமிழ் முயலவில்லை என்பது வேதனை தருகிறது. ஆதார படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில், ஏசியாநெட் தமிழ் இணையதளம் வெளியிட்ட செய்தி மற்றும் தலைப்பு உண்மை. ஆனால், செய்திக்கு பயன்படுத்தியுள்ள புகைப்படம் தவறானது. இதைப் பார்க்கும்போது, தவறான அர்த்தமே ஏற்படுகிறது.
முடிவு
ஏசியாநெட் வெளியிட்ட செய்திக்கும், அதன் முகப்பு படத்திற்கும் சம்பந்தமே இல்லை. இதன்மூலம், இந்த செய்தியில் உண்மையும், பொய்யும் கலந்துள்ளதாக, நிரூபிக்கப்படுகிறது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Title:ரூ. 1.76 லட்சம் கோடி சொத்து மதிப்பு காட்டிய வேட்பாளர்; அ.ராசா புகைப்படத்தால் சர்ச்சை
Fact Check By: Praveen KumarResult: Mixture
