
அமெரிக்கா கைது செய்துள்ள வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்க வலியுறுத்தி வெனிசுலா மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வெனிசுலா நாட்டுக் கொடியுடன் பிரம்மாண்ட பேரணி நடந்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் விடுதலைக்காக தலைநகர் காரகஸின் வீதிகளில் ஒரே உடலாக ஒன்றிணைந்துள்ள மக்கள். பெரிய ஊடகங்களில் வெளிவராத காட்சிகள்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை சமீபத்தில் அமெரிக்கா அத்துமீறி கைது செய்தது. இந்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி வெனிசுலா நாட்டு மக்கள் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தியதாக வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

வீடியோவை பார்க்கும் போது மக்கள் கூட்டமாகப் பேரணி சென்றது போல இல்லை. ஏஐ மூலம் மனிதர்கள் கூட்டமான செல்வது போன்று உருவாக்கப்பட்டது போன்று உள்ளது. கொடியில் உள்ள நட்சத்திரங்களுள் ஒன்று தவறாக இருப்பதைக் காண முடிந்தது. பேரணியில் செல்பவர்கள் கைகளை உயர்த்தி கோஷமிடும் காட்சியில் கைகளுக்கு பதில் விரல்கள் இல்லாத கை, கால் போன்று தோற்றம் தெரிகிறது. இவை எல்லாம் இந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். இந்த வீடியோ பற்றி எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. பலரும் இதை பதிவிட்டிருந்தனர். அவற்றுள் டிக்டாக் செயலியில் ஒருவர் முதன் முதலாக பதிவிட்டது போன்று கூகுள் லென்ஸ் காட்டியது. நம் நாட்டில் டிக்டாக் செயலிக்கு தடை உள்ளதால், இலங்கை குழுவினரின் உதவியுடன் அந்த டிக்டாக் பதிவை ஆய்வு செய்தோம். அதில் அந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று தகவல் கிடைத்தது.
இந்த வீடியோ மட்டுமின்றி இன்னும் ஏராளமான போராட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு அந்த டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இந்த வீடியோவை ஏஐ கண்டறிய உதவும் இணையதளங்களில் பதிவேற்றித் தேடினோம். அதுவும் கூட இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று கூறியது.

தொடர்ந்து தேடியபோது, colombiacheck.com என்ற ஃபேக்ட்செக் இணையதளத்தில் இந்த வீடியோ தொடர்பாக கட்டுரை வௌியாகி இருப்பது தெரியவந்தது. அதில், இந்த வீடியோ உண்மையானது இல்லை என்று உறுதி செய்திருந்தனர். அதிலும் நமக்கு கிடைத்த டிக்டாக் வீடியோவை ஆதாரமாக வைத்திருந்தனர். அதனுடன் அந்த வீடியோவில் வெனிசுலா நாட்டுக் கொடி தவறாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

வெனிசுலா நாட்டு கொடியில் உள்ள நட்சத்திரங்கள் சிவப்பு பக்கத்தைப் பார்த்தது போன்று அரை வட்ட வடிவில் இருக்கும். ஆனால், இந்த வீடியோவில் மஞ்சள் பக்கத்தைப் பார்த்தது போன்று உள்ளது. எனவே, இந்த வீடியோ போலியானது என்று குறிப்பிட்டிருந்தனர். நாமும் அந்த நாட்டுக் கொடியுடன் இந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த கொடியை ஒப்பிட்டுப் பார்த்தோம். நட்சத்திரங்கள் தவறாக இருப்பது தெளிவானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்க வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்திய வெனிசுலா மக்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:நிக்கோலஸ் மதுரோ விடுதலைக்காகப் போராடும் வெனிசுலா மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


