‘’அதிமுக-வின் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக எல்.ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளர் இவர்,’’ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: facebook.com I Archive 1 I Archive 2

அதிமுக-வின் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்.ஜெயசுதா புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த எடப்பாடி திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எல். ஜெயசுதா அவர்கள் நியமனம்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Sharavanan CP என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்த வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் முதன் முறையாக மாவட்டச் செயலாளராகப் பெண் ஒருவரை அதிமுக நியமித்துள்ளது என்று பலரும் பதிவிட்டு விட்டு வருகின்றனர். AIADMK Trends™ @AIADMKTrends என்ற எக்ஸ் (ட்விட்டர்) தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் கீதா ஜீவன் திமுக-வின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.

இவருக்கு முன்பு கரூர் மாவட்ட திமுக செயலாளராக வாசுகி முருகேசன் இருந்துள்ளார். அப்படி இருக்கும் போது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன் முறையாகப் பெண் ஒருவரை மாவட்டச் செயலாளராக அதிமுக நியமித்துள்ளது என்று குறிப்பிட்ட தகவல் தவறானது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்து கட்சியையே வழிநடத்தியவர் ஜெயலலிதா. பெண் ஒருவர் கட்சியின் பொதுச் செயலாளராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே இருந்து சாதனைகள் புரிந்துள்ளார். அப்படி இருக்கும் போது மாவட்டச் செயலாளரை நியமித்ததற்கு எல்லாம் பெருமைப்பட வேண்டுமா என்ற கேள்வியுடன் இவருக்கு முன்பு தமிழ்நாட்டின் அரசியல் கட்சியில் மாவட்டச் செயலாளர்களாக இருந்த பெண்களின் பட்டியலைத் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: dmk.in I Archive

திமுக-வின் இணையதளத்தில் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் கீதா ஜீவன் பெயரைக் காண முடிந்தது. அதே போல் கரூர் திமுக மாவட்டச் செயலாளராக இருந்த வாசுகி முருகேசன் மறைவுற்றபோது வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. அதே போன்று சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 144 மாவட்டச் செயலாளர்களை நியமித்தது. அதில் பல பெண்கள் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: dinamani.com I Archive 1 I maalaimalar.com I Archive 2

அதற்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்ட செய்தியும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய செய்தியும் கூட நமக்கு கிடைத்தது. இவை எல்லாம் ஏற்கனவே சில பெண் மாவட்டச் செயலாளர்கள் தமிழக அரசியல் கட்சிகளில் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் தவறான தகவல் இடம் பெற்றுள்ளது உறுதியாகிறது.

முடிவு:

தமிழ்நாட்டில் முதன் முதலாக பெண் ஒருவரை மாவட்டச் செயலாளராக நியமித்த கட்சி அதிமுக தான் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழகத்தின் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த கட்சி அ.தி.மு.க-வா?

Written By: Chendur Pandian

Result: Misleading