விஜயகாந்த் தபால் தலையை வெளியிட்டாரா மோடி?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தபால் தலையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் பிரதமர் நரேந்திர மோடியும் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இணைந்து விஜயகாந்தின் தபால் தலையை வெளியிடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேப்டன் விஜயகாந்த் தபால் தலை வெளியிடப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தேமுதிக நிறுவனரும் நடிகருமான மறைந்த விஜயகாந்தின் தபால் தலையை மத்திய அரசு வெளியிட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடந்ததாகச் செய்தி இல்லை. மேலும், தபால் தலையில் இந்தி எழுத்து இல்லை. எப்போது வெளியிடப்பட்டது என்றும் இல்லை (இந்த விவரங்கள் எல்லாம் 1976ல் வெளியான காமராஜர் தபால் தலையில் இருந்து, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் தபால்தலை வரை உள்ளதை காணலாம்). அனைத்துக்கும் மேலாக அந்த தபால் தலை எவ்வளவு விலை என்பதைக் கூட குறிப்பிடவில்லை. இவை எல்லாம் இந்த புகைப்படம் போலியானது என்பதை உறுதி செய்தன. ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில், நடிகர் விஜயகாந்தின் தபால் தலையை இந்தியத் தபால் துறை வெளியிட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். தபால் துறை அப்படி எந்த ஒரு தபால் தலையை வெளியிட்டதாகவும் செய்தி கிடைக்கவில்லை. விஜயகாந்த் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உயிரிழந்தார். எனவே, 2024, 2025 மற்றும் 2026 ஜனவரி மாதத்தில் இந்தியத் தபால் துறை வெளியிட்ட தபால் தலைகளை அதன் இணையப் பக்கத்தில் பார்வையிட்டோம். விஜயகாந்த் தபால் தலையை வெளியிட்டதாக பதிவு இல்லை. இதன் மூலம் இந்த தகவல் தவறானது என்று உறுதியானது.

அடுத்ததாக, இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். இதே போன்று எந்த ஒரு புகைப்படமும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, இந்த புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்பதால் ஏஐ புகைப்படங்களைக் கண்டறிய உதவும் இணையதளத்தில் (thehive.ai) பதிவேற்றி தேடினோம். எல்லா ஏஐ புகைப்படங்களைக் கண்டறிய உதவும் தளங்களும் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதுதான் என்று உறுதி செய்தன. 

இந்திய தபால் துறை இதுவரை வெளியிட்ட தபால் தலைகளில் 2024ம் ஆண்டு முதல் 2026 ஜனவரி வரை வெளியான தபால் தலைகளில் விஜயகாந்த் புகைப்படத்துடன் கூடிய தபால் தலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்திய தபால் துறை வெளியிடும் தபால் தலைகளில் எல்லாம் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் இருக்கும். ஆனால், விஜயகாந்த் தபால் தலை என்று கூறப்படும் ஸ்டாம்பில் இந்தி இல்லை. அது வெளியிடப்பட்ட ஆண்டும் குறிப்பிடப்படாமல் உள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த தகவல் மற்றும் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்திய அரசு தேமுக தலைவர் விஜயகாந்தின் தபால்தலையை வெளியிட்டது என்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:விஜயகாந்த் தபால் தலையை வெளியிட்டாரா மோடி?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply