தூத்துக்குடி பனிமய மாதாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வணங்கிய படத்தை எடிட் செய்து, காமராஜரை தான் அண்ணாமலை வணங்கினார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான காமராஜர் சிலையை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வணங்குவது போன்று புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், "கல்வி கண் திறந்த அப்பாச்சி காமராஜர் வழியில் அண்ணன் அண்ணாமலை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை என் தேசம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஆகஸ்ட் 15ம் தேதி பதிவிட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் நடைப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்துக்குச் சென்று வழிபட்டார். இதை அவர் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களிலும் பதிவிட்டிருந்தார்.

இந்த சூழலில், அவர் பனிமய மாதாவை வணங்கவில்லை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான காமராஜர் சிலையைத் தான் வணங்கினார் என்பது போல பலரும் படத்தை எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர். அண்ணாமலையே பனிமயமாதா பேராலயத்துக்குச் சென்று வழிபட்டோம் என்று கூறியிருந்த நிலையில் இந்த படம் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, உண்மையை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியான பதிவை தேடி எடுத்தோம். 2023 ஆகஸ்ட் 13ம் தேதி அண்ணாமலை இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். நிலைத் தகவலில், இன்று #EnMannEnMakkal பயணத்தின் போது, மிகவும் பிரசித்தி பெற்ற, பல நூற்றாண்டுகள்பழமையான, போர்ச்சுகீசியர் காலத்தில் கட்டப்பட்ட தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திற்குச் சென்று வழிபட்டோம். ஒவ்வொரு ஆண்டும் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் பனிமய மாதா ஆலயத் திருவிழா, கடந்த வாரம் விமரிசையாக நடைபெற்றது என்பதை அறிந்தும், ஆலயத்தின் தங்கத் தேரை தரிசித்தும் மகிழ்ச்சி அடைந்தோம். உலக மக்கள் அனைவரும் எப்போதும் அமைதியுடனும், சமாதானத்துடனும் மகிழ்ந்திருக்க பிரார்த்தித்துக் கொண்டோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Archive

அண்ணாமலையின் பதிவு அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் உண்மையில்லை, எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பனிமய மாதாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வழிபட்ட புகைப்படத்தை எடிட் செய்து காமராஜரை வணங்கிய அண்ணாமலை என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காமராஜர் சிலையை வணங்கிய அண்ணாமலை என்று பரவும் எடிட் செய்த புகைப்படம்!

Written By: Chendur Pandian

Result: False