
ஆறு மாத குழந்தை உடலில் மின்சாரம் உள்ளதாகவும், குழந்தையின் மீது எல்.இ.டி பல்ப்பை வைத்தால் அது ஒளிர்வதாகவும் பல செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link 1 | News 7 Article Link | Archived Link 2 |
மின்சார பெண் குழந்தை என்று ஒரு குழந்தையின் படத்துடன் கூடிய செய்தி இணைப்பை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஆறு மாத குழந்தையின் உடலில் பட்டவுடன் பல்ப் எரியும் அதிசயம்!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை News7Tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 செப்டம்பர் 24ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குழந்தையின் உடலில் மின்சாரம் உள்ளது என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. மேலும், தொட்டால் எரியக்கூடிய ரீச்சார்ஜ் செய்யும் வசதியுடைய எல்.இ.டி பல்புகள் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன. எனவே, அதை வைத்து ஏதும் கண்கட்டிவித்தை காட்டியுள்ளது போல் தெரிந்தது. எனவே, News7Tamil வெளியிட்ட செய்தியை ஆய்வு செய்தோம்.
அந்த செய்தியில், “ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், ஆறு மாத குழந்தையின் உடில் பட்டவுடன் பல்ப் எரியும் அதிசயத்தை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். அந்த பெண் குழந்தையின் மீது பல்ப்பை வைக்கும்போது மின்சாரத்தில் பொருத்தினால் எப்படி எரியுமோ அதுபோல் பல்ப் எரிகிறது” என்று குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், இது தொடர்பாக வீடியோ இணைப்பு எதையும் அவர்கள் அளிக்கவில்லை.
Search Link | Dinakaran | Archived Link |
இது தொடர்பாக கூகுளில் தேடியபோது, தந்தி டிவி, தினகரன் என்று பலரும் இந்த செய்தியை பகிர்ந்திருப்பது தெரிந்தது. திந்தி டி.வி அந்த செய்திப் பதிவை நீக்கிவிட்டது. தினகரன் செய்தியில், அந்த குழந்தையை மருத்துவர்களிடம் காட்டியதாகவும், குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையின் உடலில் மின்சாரம் உள்ளது என்று கண்டறிந்து கூறிதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். அந்த மருத்துவர்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தார்களோ…
Archived Link |
லைட் எரியும் குழந்தையின் வீடியோவைப் பார்த்தோம், அதில், ஒருவர் தெலுங்கில் பேசுகிறார், குழந்தையின் உடலில் மின்சாரம் உள்ளது. பல்ப் வைத்தால் எரிகிறது பாருங்கள். மிகவும் ஆச்சர்யமான விஷயம் என்று கூறுகிறார். வெறும் 23 விநாடிகள் மட்டுமே அந்த வீடியோ ஓடுகிறது. கையில் அந்த நபர் வைத்துள்ளது ரீச்சார்ஜபிள் எல்.இ.டி லைட் போலவே உள்ளது. அந்த பல்ப்பை வேறு நபர்கள் மீது வைத்தால் எரிகிறதா இல்லையா என்று காட்டவில்லை. பிறகு, எதன் அடிப்படையில் குழந்தையின் உடலில் மின்சாரம் உள்ளது என்று இத்தனை செய்தி ஊடகங்களும் உறுதி செய்தன என்பதுதான் தெரியவில்லை.
இந்த குழந்தை தொடர்பாக ஆந்திராவில் செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா? மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா என்று தேடினோம். அப்போது, இந்த செய்தியை நியூஸ் 18 தெலுங்கு வெளியிட்டது தெரிந்தது. மேலும், ஆந்திராவில் எல்.இ.டி பல்ப்பை வைத்து பலரும் இதுபோன்று லைட் எரிகிறது என்று வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவது தெரிந்தது.
Search Link | newindianexpress.com | Archived Link |
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதள செய்தி ஒன்றில், சிறுவன் ஒருவன் தொட்டாலே பல்ப் எரிகிறது, அவன் உடலில் மின்சாரம் உள்ளது என்று யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் போலியானது என்று செய்தி வெளியாகி இருந்தது தெரிந்தது. அந்த செய்தியில், சில தினங்களுக்கு முன்பு சிறுவன், சிறுமி மீது எல்.இ.டி பல்ப்பை வைத்தால் அது எரிகிறது. இதனால், அந்த ஊரின் செலிபிரிட்டிகளாக அவர்கள் மாறிவிட்டார்கள் என்று செய்தி வெளியாகி இருந்தது. இந்த தகவலை அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும் இது தொடர்பாக தெலங்கானாவைச் சார்ந்த மூத்த அறிவியலாளரும் தெலங்கானா அறிவியல் கழகத்தின் முன்னாள் தலைவருமான மோகன் ராவின் பேட்டியையும் வைத்திருந்தனர். அதில் அவர், “ஒரு பல்ப்பை எரிய வைக்கும் அளவுக்கு மனிதனால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. நம்முடைய உடலில் கோடிக் கணக்கான நியூரான்கள் உள்ளன. இவை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. ஆனால், அது 60 மில்லிவோட் அளவுக்குத்தான் இருக்கிறது. இதைக் கொண்டு மின்சார பல்ப்பை எரிய வைக்க முடியாது” என்று கூறியிருந்தார்.
மேலும், இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலில், தொட்டால் எரியக்கூடிய வகையில் எல்.இ.டி பல்புகள் விற்பனைக்கு வந்துவிட்டன. அந்த பல்ப்பை பயன்படுத்தி வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
Search Link |
தொட்டால் எரியக்கூடிய எல்.இ.டி பல்புகள் உள்ளதா… அதன் விலை எவ்வளவு என்று தேடினோம். அது தொடர்பாக நிறையத் தகவல் கிடைத்தது. இந்த பல்புகள் எப்படி வேலை செய்கின்றன என்று யூடியூபில் தேடினோம். அப்போது, இதன் செயல்முறை பற்றி வெளியான வீடியோ கிடைத்தது.
Archived Link |
நம்முடைய ஆய்வில்,
தொட்டால் எரியக்கூடிய ரீச்சார்ஜ் செய்யக்கூடிய எல்.இ.டி பல்புகளை வைத்து விளையாட்டாகவோ விஷமத்தனமாகவோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள வீடியோ பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது தெரிகிறது.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள குழந்தையின் உடலில் மின்சாரம் உள்ளது என்ற செய்திக்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஆந்திரா, தெலங்கானாவில் குழந்தைகளின் உடலில் மின்சாரம் உள்ளது என்று அவ்வப்போது வீடியோக்கள் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் உள்ளது என்று பகிரப்படும் குழந்தைகள் எந்த ஒரு மருத்துவ ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரீச்சார்ஜபிள் எல்.இ.டி லைட்டை பயன்படுத்தி இதுபோன்ற வீடியோக்கள் எடுக்கப்படுவதாக வெளியான செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
மூன்று மணி நேரம் வரை எரியும் இதுபோன்ற தொட்டால் எரியக்கூடிய எல்.இ.டி விளக்குகள் விற்பனைக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், குழந்தையின் உடலில் மின்சாரம் உள்ளது, குழந்தையின் மீது எல்.இ.டி பல்ப்பை வைத்தால் அது எரிகிறது என்று வெளியான தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“குழந்தையின் உடலில் மின்சாரம்?” – அதிசயிக்க வைத்த ஃபேஸ்புக் செய்தி!
Fact Check By: Chendur PandianResult: False
