
இஸ்ஸாமியர் வாக்குகளைக் கவர பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இஸ்லாமியர்கள் அணிவது போன்று குல்லா அணிந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குல்லா அணிந்திருப்பது போன்ற புகைப்படத்துடன் புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, அமித் ஷா… குறிப்பு: மேற்கு வங்கத்தில் 31 சதவிகிதம் இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எல்லாம் நடிப்பா கோபால் ஸ்.?” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை Kumari Rajan Savier என்பவர் 2021 மார்ச் 14 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தைப் பார்க்கும்போதே எடிட் செய்யப்பட்டது, இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி தனியாக சேர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது. இருப்பினும் பலரும் இதை ஷேர் செய்து வரவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2019ம் ஆண்டில் இருந்து மோடி, அமித்ஷா இருக்கும், தொப்பி இல்லாத புகைப்படத்தை பல ஊடகங்களும் தங்கள் செய்திகளில் பயன்படுத்தி வந்திருப்பதைக் காண முடிந்தது. இருப்பினும் இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தொடர்ந்து தேடினோம்.
அசல் பதிவைக் காண: news18.com I Archive
நியூஸ் 18 வெளியிட்டிருந்த பதிவு ஒன்று கிடைத்தது. அதில், நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி மறைவை ஒட்டி அவரது இல்லத்துக்கு ஆறுதல் கூற பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வந்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர். அதில், மோடியும், அமித்ஷாவும் வீட்டைவிட்டு வெளியே வரும் புகைப்படத்தை எடுத்து அதில் குல்லாவைச் சேர்த்து போலியாக வெளியிட்டிருப்பது தெரிந்தது.
குல்லா அணிந்திருக்கும் படத்தை மிகவும் நெருக்கமாகக் காட்டியுள்ளனர். அவர்கள் பின்னால் கிரில் கேட் கம்பிகள் போல இருப்பதைக் காண முடிகிறது. அருண் ஜெட்லி வீட்டின் வாசலில் எடுத்த படத்தில் அதே போன்ற கம்பி இருப்பதைக் காணலாம். இதன் மூலம் இந்த புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து தவறாக பகிர்ந்து வருவது உறுதியாகிறது.
முடிவு:
அருண்ஜெட்லி மறைந்தபோது அவரது இல்லத்துக்கு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் சென்ற படத்தை எடிட் செய்து தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இல்லாமியர் வாக்குகள் பெற மோடி, அமித்ஷா குல்லா அணிந்தனரா?- போலியான படத்தால் பரபரப்பு!
Fact Check By: Chendur PandianResult: Altered
