FactCheck: சசிகலா ஜாதி பற்றி சி.வி.சண்முகம் விமர்சித்தாரா?- நாரதர் மீடியா மறுப்பு…

அரசியல் சமூக ஊடகம்

‘’சசிகலாவின் ஜாதியினர் குற்றப் பரம்பரை. அவர்களது ரத்தத்திலேயே குற்றச் செயல்கள் ஊறியுள்ளது – சி.வி.சண்முகம்,’’ என்று கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

8 பிப்ரவரி 2021 அன்று குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘’சசிகலா தன்னுடைய பலமாக கருதும் சமூகம் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப்பரம்பரை என முத்திரை குத்தப்பட்டவர்கள். குற்றச்செயல்கள் புரிவது அவர்கள் ரத்தத்திலேயே இருக்கிறது,’’ என்று பேசியதாக எழுதியுள்ளனர். இந்த நியூஸ் கார்டில், NaratharMedia என்ற லோகோ இடம்பெற்றுள்ளது.

எனவே, நாரதர் மீடியா வெளியிட்ட நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதாக, தெரிகிறது.

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சையான பேச்சுகளுக்கு பெயர் பெற்றவர். இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருந்து வெளியான சசிகலா பெரும் வரவேற்புக்கு இடையே சென்னை வந்து சேர்ந்தார்.

அவர் தமிழ்நாடு அரசியல் களத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில், திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க ஆசைப்படுவதாக, அறிவித்துவிட்டார்.

இத்தகைய சூழலில், சசிகலா திரும்ப வந்தபோது, அமைச்சர் சி.வி.சண்முகம் பிப்ரவரி 6, 2021 அன்று செய்தியாளர்களை சந்தித்து, காட்டமாகப் பேசியிருந்தார்.

ஆனால், இந்த பேட்டியில், சசிகலாவின் ஜாதி பற்றியோ, அந்த ஜாதியினர் குணம் பற்றியோ அவர் எதுவும் பேசவில்லை. நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவு, பிப்ரவரி 8, 2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த காலக்கட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியது மேற்கண்ட செய்தியாளர்கள் சந்திப்பில்தான். அதிலும் இப்படி ஜாதி விமர்சனம் கூறவில்லை.

இதற்கிடையே, பிப்ரவரி 11, 2021 அன்று சி.வி.சண்முகம் மற்றொரு பரபரப்பான பேட்டி அளித்திருந்தார். அதில், டிடிவி தினகரன் பற்றி காரசாரமாக விமர்சித்துப் பேசியுள்ளார். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். எனினும், இந்த பேட்டியில் கூட சசிகலா ஜாதி பற்றி அவர் விமர்சிக்கவில்லை.

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு, சி.வி.சண்முகம் சார்ந்த ஜாதியினருக்கும், சசிகலா ஜாதியினருக்கும் இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாக, அமைந்துள்ளது. அதில் உள்ள கமெண்ட்களை பார்த்தாலே நமக்கும் இது தெளிவாகிறது.

எனவே, மீண்டும் ஒருமுறை தகவல் சரிபார்ப்பிற்காக, நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் துணை ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ் அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தோம். இந்த செய்தியை பார்வையிட்ட அவர், ‘’இப்படி சி.வி.சண்முகம் சமீபத்தில் எங்கேயும் பேசவில்லை. அப்படி பேசியிருந்தால், ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பாகியிருக்கும். எங்களுக்கு இதுவரை இப்படியான செய்தி பார்வைக்கு வரவில்லை.,’’ என்றார்.

அடுத்தப்படியாக, இந்த செய்தியில் Narathar Media என்ற லோகோ உள்ளதால், அவர்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று இப்படி ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளனரா என்று தகவல் தேடினோம். ஆனால், அவர்கள், இதுபற்றி மறுப்பு ஒன்றை வெளியிட்டது மட்டுமே காணக் கிடைத்தது.

அதனை ஆதாரத்திற்காக, கீழே இணைத்துள்ளோம

Narathar Media FB Post I Archived Link

இதுவரை நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

சமீப நாட்களில், சி.வி.சண்முகம் எங்கேயும் சசிகலா ஜாதி பற்றி பேசவில்லை. அவர் அப்படி பேசியதாக சிலர், நாரதர் மீடியா லோகோ பயன்படுத்தி தவறான தகவலை பரப்பியுள்ளனர். இதனை குறிப்பிட்ட ஊடகம் மறுத்துள்ளது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சசிகலா ஜாதி பற்றி சி.வி.சண்முகம் விமர்சித்தாரா?- நாரதர் மீடியா மறுப்பு…

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •