
கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் நடத்திய நிகழ்ச்சியில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் பிரசாரம் செய்கிறார். அதை தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி, தற்போது தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், கனிமொழி, பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டவர்கள் ரசித்து கவனிப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “ஓஓஓ இதுதான் குடும்ப ஜெபக்கூட்டமா ?? காசுக்கு தகுந்த மாதிரி ஆசீர்வாதம் பண்ணினா அவர் ஆண்டவரா? இல்ல வியாபாரியா ??
பகுத்தறிவு பேசும் கூட்டம் எல்லாம் இப்போ பேசுங்கடா… பேசவே மாட்டானுங்க இத ரசிச்சி கேப்பானுங்க போல” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை We Support Maridhas என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 நவம்பர் 2ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தங்கள் மத உணர்வை புண்படுத்திவிட்டார்கள் என்று சொல்பவர்கள் மற்ற மதங்களை மிக மோசமாக விமர்சிப்பது மட்டும் சரி என்ற முடிவுக்கு எப்படி வந்தார்கள் என்று தெரியவில்லை. மதம் தொடர்பான கருத்துக்குள் நாம் செல்லவில்லை. இந்த வீடியோ உண்மையானதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.
தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி, தற்போது தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் என தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால், மோகன் சி லாசரஸ் வீடியோவுக்கும் தி.மு.க நிர்வாகிகள் வீடியோவுக்கும் வேறு பாடு இருப்பதைக் காண முடிகிறது.
தி.மு.க-வினர் இருக்கும் வீடியோ மிக தெளிவாகவும், மோகன் சி லாசரஸ் வீடியோ தெளிவு குறைவாகவும் உள்ளது. இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.
InVID WeVerify என்ற செயலியைப் பயன்படுத்தி வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கவிஞர் வாலி தலைமையில் நடந்த தி.மு.க நிகழ்ச்சியின் வீடியோவை எடிட் செய்து கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் வீடியோவோடு சேர்த்து விஷமத்தனமாக எடிட் செய்திருப்பது தெரிந்தது.
கருணாநிதி உள்ளிட்டவர்கள் பங்கேற்ற வீடியோ 2009ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கருத்தரங்கின் போது எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது. கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, ரஜினிகாந்த் எனப் பலரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
கருணாநிதி பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கிறார். சௌகரியமாக அவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை எல்லாம் காட்டியிருப்பது வீடியோவைப் பார்க்கும் போது தெரிந்தது. முழு வீடியோவில் கருத்தரங்கத்தின் தொடக்க உரையாக வாலி பேசிய போது இடம் பெற்ற காட்சிகளை எடுத்து போலி வீடியோ உருவாக்கியிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
We Support Maridhas என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்த வீடியோவில் தி.மு.க தொடர்பாக இடம் பெற்ற காட்சிகள் அனைத்தும் அண்ணா நூற்றாண்டு கருத்தரங்கில் அப்படியே இருந்தன. அதை வெட்டி, ஒட்டி எடிட்டிங் வேலையை செய்திருக்கிறார்கள்.
அதே போல் மோகன் சி லாசரஸ் பேசும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதைப் பற்றி மோகன் சி லாசரஸ் பேசிய வீடியோவை விமர்சித்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்துள்ளனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இந்த வீடியோவை எடுத்து, கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க-வினர் முன்னிலையில் மோகன் சி லாசரஸ் மத பிரசாரம் செய்தார் என்பது போல தவறான தகவல் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த தகவல், தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மோகன் சி லாசரஸ் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
