பெண்ணின் மானம் காத்த இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

இந்து பெண் ஒருவரின் மானம் காத்த இஸ்லாமியர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சிசிடிவி காட்சி என்று வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இளம் ஜோடி கோவிலுக்குச் சென்று திரும்புகின்றனர். பைக்-கை ஸ்டார்ட் செய்யும் போது, இளம் பெண்ணின் தாவணி இருசக்கர வாகனத்தின் டயரில் மாட்டிக்கொள்கிறது. அப்போது அந்த வழியே வந்த இஸ்லாமியத் தம்பதியினர் தாவணியை எடுக்க உதவி செய்கின்றனர். இஸ்லாமியப் பெண் தன்னுடைய பர்தாவை கழற்றி, தாவணி இன்றி இருக்கும் இளம் பெண்ணுக்கு அணிவிக்கிறார். இஸ்லாமிய தம்பதியினருக்கு அந்த இளம் ஜோடிகள் நன்றி கூறுகின்றனர்.இந்த வீடியோ 2022 ஆகஸ்ட் 19ம் தேதி எடுக்கப்பட்டது போன்று சிசிடிவி வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை. Liberty Tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 24ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விழிப்புணர்வுக்காக சிசிடிவி காட்சி என நாடக காட்சிகள் பல சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வீடியோக்களின் கடைசியில் இது உண்மையான சம்பவம் இல்லை, நடிகர்களைக் கொண்டு இந்த வீடியோ உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அப்படியான அறிவிப்பு எதுவும் இல்லை. 

அதே நேரத்தில் சாலையில் ஒரு பெண் தாவணி இழந்து அவதியுறுகிறார், சாலையில் செல்லும் யாரும் உதவ முன்வரவில்லை. சிலர் ஒதுங்கிச் செல்வதைக் காண முடிகிறது. தாவணியை அந்த பெண் வேண்டுமென்றே பின்னால் போடுவது, அதை எடுக்க முயற்சிக்காமல் அப்படியே விடுவது, உதவி செய்ய வந்த பெண்ணை அவருடன் வந்தவர் தடுப்பது என நிறைய நாடக காட்சிகள் இருந்தன. எனவே, இந்த வீடியோ ஸ்கிரிப்டட் வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். 

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, மனித நேயம், இந்து பெண், இஸ்லாமியர் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ கிடைத்தது. அதில், “#வெள்ளிக்கிழமை 19_8_2022 அன்று மானம் காத்த மங்கை. மனிதநேயம் மலரட்டும் மதவெறி  சங்கிகள் மாண்டு போகட்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவின் கடைசியில் நாம் குறிப்பிட்டது போன்று “Disclaimer” இருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook 

அதில், Reel life vido footage published only for the purpose of educating” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “இந்த வீடியோவில் உள்ள கதாபாத்திரங்கள் பொழுது போக்குக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் ரீல் லைஃப் வீடியோ, இந்து பெண்ணுக்கு உதவிய இஸ்லாமியப் பெண் என்று எல்லாம் வேறு சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது. யூடியூப் வீடியோ ஒன்று கிடைத்தது. 3RD EYE என்ற யூடியூப் பக்கம் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தது. மேலும், இதே போன்று ஏராளமான வீடியோக்களை அந்த யூடியூப் சேனல் வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: YouTube

அதில், “Disclaimer: Thank you for watching! Please be aware that this Channel features scripted dramas and parodies to Aware People in Differnet Situations. This Channel Brings Social Awareness Videos. These short films are for entertainment purposes only!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட வீடியோ இது. உண்மையான வீடியோ இல்லை” என்ற வகையில் குறிப்பிட்டிருந்தனர். 

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உண்மையானது இல்லை. இது உண்மையான சிசிடிவி காட்சியும் இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படம் வகையிலான வீடியோ இது என்பது உறுதியாகிறது.

முடிவு:

இந்து பெண்ணுக்கு உதவிய இஸ்லாமிய பெண்ணின் மனித நேயம், மத நல்லிணக்கம் என்று பரவும் வீடியோ உண்மையில் நிகழ்ந்தது இல்லை, நடிகர்கள் வைத்து எடுக்கப்பட்ட ஷார்ட் ஃபிலிம் வகையைச் சார்ந்தது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெண்ணின் மானம் காத்த இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context

Leave a Reply