
‘’வாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஃபார்வேர்ட் செய்யப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:


நமது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப் வழியாக வந்த இச்செய்தியை, நம்மிடம் அனுப்பி உண்மை அறியும் சோதனை நடத்த கேட்டுக் கொண்டார்.
இதனை பேஸ்புக்கிலும் சிலர் பகிர்ந்திருந்ததை கண்டோம்.

உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் பற்றி வித விதமான மீம்ஸ்கள், நகைச்சுவை பதிவுகள் மட்டுமின்றி வதந்திகள் பலவும் பகிரப்பட்டு வருகின்றன. இதனால், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் தவறாக வழிநடத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பற்றி வதந்தி பரப்புவது கண்டிக்கத்தக்க செயல் என்றாலும், இதுதொடர்பாக பகிரப்படும் மீம்ஸ்கள், நகைச்சுவை பதிவுகள் கருத்து சுதந்திரத்துடன் தொடர்புடைய விசயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி பரவும் மீம்ஸ்கள் உள்ளிட்டவை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால், இதனை ஏற்கனவே மத்திய அரசு மறுத்துவிட்டது. இதுபற்றி PIB Fact Check வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு கீழே தரப்பட்டுள்ளது.

PIB Fact Check Twitter Link | Archived Link |
இத்தகைய சூழலில்தான், மத ரீதியான கலவரம் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்ஆப் குரூப்களில் பதிவு வெளியிடுவோர், தேச துரோக பதிவுகளை பகிர்வோர் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறி மேற்குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் செய்தி பகிர்ந்துள்ளனர்.
இந்த தகவலில் Section 153 A எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இதுபற்றி வேறு ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது, இது கடந்த 2018ம் ஆண்டில் தெலுங்கானா மாநிலம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு செய்தி என்று தெரியவந்தது.

Telanganatoday.com Link | Archived Link |
இது தெலுங்கானாவை மையப்படுத்தி வெளியிட்ட செய்தியாகும். இதற்கும், மற்ற இந்திய பகுதிகளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள Section 153 A என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். அதுவும் கூட வாட்ஸ்ஆப் குழு அட்மின் அல்லது தனிப்பட்ட நபரை இதன்கீழ் உடனடியாக தண்டித்துவிட முடியாது.
ஒரு சிலர் குழுவாக சேர்ந்து, மத ரீதியான வன்முறையில் ஈடுபடுவது, அல்லது யாரேனும் ஒரு தனிப்பட்ட நபரை குறிவைத்து தாக்குவது உள்ளிட்ட செயல்களை செய்யும்போதுதான் Section 153 A-ன்படி தண்டிக்க முடியும்.
இது பெரும்பாலும், ஜாதி, மத ரீதியான துவேஷ கருத்துகளை பரப்புவோர், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோருக்கே பொருந்தும். இதில், யதேச்சையாக கருத்து பகிரும் தனிநபர் அல்லது வாட்ஸ்ஆப் குரூப் அட்மின்களை தண்டிக்க முடியாது. அவர் உள்நோக்கத்துடன் ஒரு குழுவாக சேர்ந்து இத்தகைய செயல்களை செய்ததாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டிக்க முடியும்.

இதுபற்றி The Quint வெளியிட்டுள்ள செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, தெலுங்கானாவில் வெளியிடப்பட்ட ஒரு பழைய செய்தியை தமிழக அரசியலுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது. அதுவும் தற்போதைய கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் இதுபோன்ற நம்பகத்தன்மை இல்லாத செய்திகளை ஃபார்வேர்ட் செய்வதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பற்றி உண்மை அறிய விரும்பினால், எமது வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:வாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா?
Fact Check By: Pankaj IyerResult: False
