அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி காகோலி கோஷ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் பேச அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பதில் சொல்ல முடியாமல் திணறியது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவர் உட்கார் என்று அதட்டலாக பேச, அமித்ஷா அமைதியாக அமர்வது போன்று காட்சியும் உள்ளது. 

நிலைத் தகவலில், “திருமதி காகோலி கோஷ் MP அமித் ஷா வை மிரட்டுகிறார் 🔥

நீ உக்காரு! உனக்கு என்ன தெரியும்? நின்னுக்கிட்டே இருக்கே… நான் சொல்றேன்ல, பேசாம உக்காரு! உனக்கு ஒன்னுந் தெரியாது.

பெட்ரோல் விலை ₹100 ஐ தாண்டியிருச்சு. விலைவாசி கன்னா பின்னா னு ஏறிடுச்சு. ஏழைகள் எப்படி சோறு திம்பாங்க னு யோசிச்சியா? எதற்கெடுத்தாலும் GST போடுறே…

பேசாம கம்முனு குந்திக்கினாரு அமித் ஷா… 😂😂😂” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் போது அமைச்சர்கள் குறுக்கிட்டால் உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அமைச்சர் பேச அவைத் தலைவர் அனுமதி அளிப்பார். பிரதமர் அல்லது முதலமைச்சர் எழுந்தால் அவையே அமைதியாகிவிடும். ஆனால், இந்த வீடியோவில் மோடி திணறுவது போன்று காட்டப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் காகோலி கோஷ் மக்களவையிலிருந்து பேசுகிறார். அவரது நாற்காலியின் நிறம் பச்சையாக இருப்பதை காணலாம். மக்களவையில் தான் இருக்கை மெத்தை பச்சை நிறத்தில் இருக்கும். மாநிலங்களவை இருக்கை மெத்தைகள் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். அமித்ஷா அமரும் காட்சியில் அவையின் இருக்கை நிறம் அடர் சிவப்பு நிறத்தில் உள்ளதைக் காணலாம். எனவே, இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

உண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அமித்ஷாவை மிரட்டி அமர வைத்தாரா என்று அறிய உண்மை வீடியோவை தேடி எடுத்தோம். 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி Sansad TV அந்த வீடியோவை யூடியூபில் பதிவிட்டிருந்தது. அதில் விலைவாசி, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு பற்றி காகோலி கோஷ் பேசுகிறார். 12:38 வது நிமிடத்தில் அந்த காட்சி வருகிறது. அதில் அவர் யாரை அமரச் சொல்கிறார் என்று தெளிவாகக் காட்டவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும் இருப்பது போன்று காட்டப்படுகிறது.

அடுத்ததாக அமித்ஷா தொர்பான வீடியோவை தேடி எடுத்தோம். அந்த வீடியோவை Sansad TV 2022 பிப்ரவரி 7ம் தேதி யூடியூபில் பதிவிட்டிருந்தது. அசதுத்தீன் ஒவைசியின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அமித்ஷா பதில் அளித்த வீடியோ அது. அதில் அவர் பதில் அளித்துவிட்டு கடையில் அமர்ந்த காட்சியை மட்டும் எடுத்து காகோலி கோஷ் வீடியோவில் சேர்த்து எடிட் செய்து பதிவிட்டுள்ளது தெளிவாகிறது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

நாடாளுமன்றத்தில் அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False