மதுவை ஆதார் கார்டு மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் உணவுக்கான மானியங்களை நிறுத்த வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ரத்தன் டாடா புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் உணவுக்கான மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும். மது வாங்க வசதி உள்ளவர்களால் கண்டிப்பாக உணவும் வாங்க முடியும். நாம் அவர்களுக்கு இலவசமாக உணவைக் கொடுத்தால் அவர்கள் பணத்தைக் கொடுத்து மது வாங்குகிறார்கள் - ரத்தன் டாடா" என்று இருந்தது.

இந்த பதிவை Shanmuganathan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 9ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரத்தன் டாடா கூறியதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. முன்பு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்தவர்களுக்கு டாடா நிறுவனங்களில் வேலை வழங்க மாட்டேன் என்று ரத்தன் டாடா கூறியதாக வதந்தி பரவியது. கொரோனா காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக பலரும் குற்றம்சாட்டி வந்த வேளையில், இந்தியப் பொருளாதாரம் மீண்டு எழும் என்று ரத்தன் டாடா உறுதி அளித்ததாகத் தகவல் பரவியது. இது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழிலும் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், மது விற்பனையை ஆதாரருடன் இணைக்க வேண்டும். மது வாங்குபவர்களுக்கு உணவு மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மதுவை வாங்கும் அளவுக்குப் பணம் வைத்திருப்பவர்களால் உணவுப் பொருளை வாங்க முடியாதா என்ற கேள்வி நியாயமானது போல இருப்பதாலும் ரத்தன் டாடாவே கூறிவிட்டார் என்று கருதுவதாலும் பலரும் இதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. உண்மையில் ரத்தன் டாடா இப்படி கூறினாரா, எப்போது கூறினார் என்று ஆய்வு செய்தோம்.

கூகுளில் ரத்தன் டாடா, மது, ஆதார் என சில கீ வார்த்தைகளை தட்டச்சு செய்து தேடினோம். ரத்தன் டாடா அப்படிக் கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், ரத்தன் டாடா இவ்வாறு கூறவில்லை என்று பல ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. ரத்தன் டாடாவின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஆய்வு செய்தபோது, அவர் மறுப்பு தெரிவித்ததாக எந்த ஒரு பதிவும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்தோம்.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive

இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரத்தன் டாடா விளக்கம் அளித்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தனர். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி என்பது ஒரு நாள் மட்டுமே இருக்கக் கூடியது ஆகும். அந்த செய்தியில் ரத்தன் டாடா வெளியிட்ட ஸ்டோரியின் ஸ்கிரீன்ஷாட்டையும் இணைத்திருந்தனர். அதில், "இந்த கருத்து நான் கூறியது இல்லை. நன்றி" என்று கூறி, Fake News (பொய்யான செய்தி) என்று குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தனர். என்டிடிவி, இந்தியன் எக்ஸ்பிரஸ் என அனைத்து முன்னணி ஊடகங்களிலும் இந்த செய்தி 2021 செப்டம்பர் 4ம் தேதி வெளியாகி இருந்தது.

அசல் பதிவைக் காண: news18.com I Archive 1 I zeenews.india.com I Archive 2

ரத்தன் டாடாவே இந்த கருத்து தன்னுடையது இல்லை, நான் இவ்வாறு கூறவில்லை என்று உறுதி செய்துள்ள நிலையில், "மது விற்பனையை ஆதாருடன் இணைக்க வேண்டும்... மதுவை வாங்குபவர்களுக்கு உணவு மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மது விற்பனை தொடர்பாக ரத்தன் டாடா கூறியதாக பகிரப்படும் கருத்து, உண்மையில் அவர் கூறியது இல்லை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மது வாங்குபவர்களுக்கு அரசு மானியம் ரத்து செய்ய வேண்டும் என்று ரத்தன் டாடா கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False