சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அமித்ஷா கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நிலைத் தகவலில், "விரைவில் நடைமுறைக்கு வர இறைவனை வேண்டுகிறேன்.." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Murugadhas Kanyakumari என்பவர் 2021 ஏப்ரல் 12 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழகம் வந்த பா.ஜ.க தலைவர்கள் பெயரில் பல போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பரவின. வட இந்தியர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று அமித்ஷா கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆனது. அது போலியானது என்று ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதே போன்ற நியூஸ் கார்டில் இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும் என்று புதிதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் புதிய தலைமுறை பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் போல இல்லை. எனவே, இது போலியானது என்று தெரிந்தது. தேர்தல் முடிந்த சூழலில், குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே இட ஒதுக்கீடு சலுகை பெறுவதாகவும் மற்ற யாருக்குமே இட ஒதுக்கீடு கிடைக்காதது போலவும் இந்த நியூஸ் கார்டை போட்டு பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த ஆய்வுக்குள் செல்லவில்லை. இந்த நியூஸ் கார்டு உண்மை என்ற அளவில் பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

ஏப்ரல் 1, 2021 அன்று புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு அதில் இல்லை. எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு பேசினோம். அவரும் “இந்த நியூஸ் கார்டு போலியானது, புதிய தலைமுறை இதை வெளியிடவில்லை” என்றார்.

ஏப்ரல் 1ம் தேதி தமிழ்நாட்டில் திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது இட ஒதுக்கீடு முறை ஒழிக்கப்படும் என்று பேசினாரா என்று பார்த்தோம். அவர் பேசிய யூடியூபில் அப்படி அவர் எதையும் குறிப்பிடவில்லை என்பது தெரிந்தது. மேலும், இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும் என்று அமித்ஷா பேசியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. உண்மையில் அமித்ஷா அவ்வாறு பேசியிருந்தால் அது எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்திருக்கும்.

அசல் பதிவைக் காண: dinamani.com I Archive 1 I oneindia.com I Archive 2

நம்முடைய ஆய்வில், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று புதிய தலைமுறை உறுதி செய்துள்ளது. குறிப்பிட்ட நாளில் நடந்த தேர்தல் பிரசாரங்களில் அமித்ஷா பேசிய முழு வீடியோவும் கிடைத்துள்ளது. அதில் அவ்வாறு கூறவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை முற்றிலும் ஒழிக்கப்படும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித்ஷா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும் என்று அமித்ஷா கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False