இஸ்லாமியராக மாறி பெரோஸ் காந்தியை திருமணம் செய்த இந்திரா! – 77 ஆண்டுகள் கழித்து சர்ச்சையை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

அரசியல் சமூக ஊடகம்

ஒடுங்கியிருந்த இஸ்லாமியர்களுக்கு தனி நாடு பெற்றுத்தந்தவர் என்பதால் காந்தி பாகிஸ்தானின் தந்தை என்றும், இந்திரா காந்தி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்ய, இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்றும், இந்திரா காந்தியின் உண்மையான பெயர் மைமுனா பேகம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்

தகவலின் விவரம்:

Archived link

“1942ல் லண்டனில் இஸ்லாம் மதம் மாறி, மைமுனா பேகம் என பெயர் மாற்றி, பெரோஸ்கானை திருமணம் செய்தேன். என்னையே இந்து என்று நம்பி ஓட்டு போட்டு வந்த நீங்கள் முட்டாளா? உங்களை ஏமாற்றிய என் பேரன் முட்டாளா?” என்று இந்திரா காந்தி கேட்பது போன்று புகைப்படம் உள்ளது. இந்திரா காந்தி அருகில் அவரது கணவர் பெரோஸ் காந்தி இருக்கிறார்.

நிலைத் தகவலில், “1759 ல் இந்தியா, பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள ஆண்டது மராத்தியர்களின் பேரரசுதான். அதாவது ஒௌரங்சீப்புக்கு எதிராக சிவாஜி தொடக்கியப்போர் முகலாயர் அரசை வீழ்த்தி ஒடுக்கி இந்துப்பேரரசு உருவாக்கியது! ஆனால் வரலாற்று புத்தகங்களில் இந்த விவரத்தை திட்டமிட்டு மறைத்தே வந்தது நேருவிய இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள்… காரனம் இந்துக்கள் எக்காரனம் கொண்டும் வீரர்களாக காட்டுவதை விரும்பவில்லை..

அப்படி இந்துக்கள் உணர்வுப்பெற்றால் அந்நிய அடிமைகள் இந்த மண்ணிலிருந்து முற்றிலுமாக துடைக்கப்படுவர் என்பதே! அப்படி ஒடுங்கியிருந்த இஸ்லாமியர்களை அணிவகுக்கவைத்து அவர்களுக்கென்று ஒரு நாட்டை பெற்றுத்தந்ததுதான் காங்கிரஸின் சாதனை! அதனால்தான் சொல்கிறோம் காந்தி பாகிஸ்தானின் தந்தையென்று!” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த பதிவை, பா.ஜ.க-வில் பணியாற்றுவதாக தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ள பொன்னி ரவி என்பவர் 2019 மே 16ம் தேதி வெளியிட்டுள்ளார். காங்கிரஸ், தி.மு.க எதிர்ப்பு மனநிலை  காரணமாக இது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

இரண்டு வெவ்வேறு விஷயங்களை ஒன்றிணைத்து இந்த பதிவை பொன்னி ரவி வெளியிட்டுள்ளார். முதலில், இந்திரா காந்திபெரோஸ் காந்தி புகைப்படம் தொடர்பான பதிவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இஸ்லாமியராக மதம் மாறி இந்திரா காந்தி திருமணம் செய்துகொண்டார் என்று கூறப்பட்டு இருந்தது. சிறுமி இந்திரா காந்தியின் கையைப் பிடித்த தேசபக்தர் என்று ஒரு பதிவு தொடர்பாக tamil.factcrescendo.com மே 20ம் தேதி ஆய்வு நடத்தியது. அதில், இந்திராகாந்தி திருமணம் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அதில் இந்து முறைப்படி அவருக்கு திருமணம் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதை மீண்டும் உறுதி செய்ய, இந்திரா காந்தியின் மதம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம். விக்கிப்பீடியாவில் இந்திரா காந்தி இந்து என்றும், பெரோஸ் காந்தி பார்சி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், பெரோஸ் காந்தி இந்து முறைப்படியே இந்திரா காந்தியை திருமணம் செய்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பான ஒரு ஆதாரம் நமக்கு கிடைத்தது.

இந்திரா காந்தியின் மருமகளான மேனகா காந்தி தொடர்ந்த வழக்கு வழக்கு செய்தி அது. சஞ்சய் காந்தியின் மரணத்துக்குப் பிறகு சொத்து விவகாரம் தொடர்பாக 1984ம் ஆண்டு மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தார். அப்போது, இந்திரா காந்தி இந்து இல்லை. பெரோஸ்காந்தியை திருமணம் செய்ததன் மூலம் அவர் பார்சியாக மாறிவிட்டார் என்று குற்றம்சாட்டியிருந்தார். அப்போது, இந்திரா காந்தி தரப்பில் நீதிமன்றத்தில் ஒரு படம் தாக்கல் செய்யப்பட்டது. 1942ம் ஆண்டு ஆனந்தபவன் இல்லத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்ததற்கான புகைப்படம்தான் அது.

INDRA 2.png

இதன் மூலம் பெரோஸ் காந்தி இஸ்லாமியர் இல்லை, அவர் ஒரு பார்சி சமயத்தைச் சார்ந்தவர் என்பதும், இந்திரா காந்தி – பெரோஸ் காந்தி திருமணம் பார்சி முறைப்படி நடந்தது என்பதும் உறுதியாகிறது.

அடுத்ததாக, இந்த பதிவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்த மராட்டிய பேரரசு என்று குறிப்பிட்டுள்ளனர். முகலாயர் வீழ்ச்சிக்குப் பிறகு, இஸ்லாமியர்கள் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டதாகவும் ஆனால், காந்தியடிகள்தான் பாகிஸ்தானை பிரித்துக்கொடுத்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

1947க்கு முன்பு பாகிஸ்தான் என்ற நாடு இல்லை. இந்தியாவும் பல அரசாக பிரிந்துதான் இருந்தது. இதை ஒன்றிணைத்தது சர்தார் வல்லபாய் பட்டேல். உண்மையில், இன்றைய பாகிஸ்தான் நிலப்பகுதி வரை மராட்டியர்களின் ஆட்சி இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் வரை இல்லை. ஆப்கானிஸ்தான் வரை எல்லையை விரிவாக்க மராட்டிய மன்னர்கள் முயன்றுள்ளனர். ஆனால், அது முறியடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும், மராட்டியர்கள் ஆட்சி பல நூற்றாண்டுகள் எல்லாம் நீடிக்கவில்லை. 1761ல் நடந்த மூன்றாம் பாணிபட் போரில் ஆப்கானிய அரசனிடம் மராட்டிய படைகள் தோல்வியைத் தழுவின. இதனால், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை மராட்டிய அரசு இழந்தது. ஆட்சியை தக்க வைக்க தொடர்ந்து போர் நடந்துள்ளது. 1800ம் ஆண்டு தொடக்கத்தில் மராத்தியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மராத்தியர்களின் வீரத்தை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. மராத்தியர்களின் வீரம் பற்றி இன்றும் பள்ளிகளில் சொல்லித்தரப்படுகிறது. மராட்டிய தலைநகர் மும்பையின் விமானநிலையம், ரயில் நிலையத்துக்கு எல்லாம் சத்ரபதி சிவாஜி பெயர் சூட்டி கவுரவிக்கப்பட்டுள்ளனர். 1996ம் ஆண்டில்தான் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இது நடந்துவிட்டது. இதன் மூலம், எந்த ஆதாரமும் இன்றி மராத்தியர்கள் வீரம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது தவறானது என்று நிரூபனம் ஆகிறது.

மேலும், ஒடுக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வாங்கிக்கொடுத்த காந்தி என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மையில், மத அடிப்படையில் நாடு துண்டாடுவதை காந்தி எதிர்த்தார். இருப்பினும் இரு நாடாகப் பிரிப்பது என்று ஒரு திட்டத்தை பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுன்ட்பேட்டன் அறிவித்தபோது, நாட்டின் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதைக் கண்டித்து, இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது தொடர்பாக காந்தி இணையதளத்தில் உள்ள செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

காந்தியடிகள் மேற்கொண்ட உண்ணாவிரதம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பாதுகாப்புப் படையினர் கூட்டமாக செல்லவே பயப்பட்ட இடத்தில், தனி ஆளாக இருந்து அமைதியை நிலைநாட்டிவிட்டார் காந்தி என்று மவுன்ட் பேட்டன் உணர்ச்சிப்பொங்க கருத்து தெரிவித்ததாக ஒரு செய்தி நமக்கு கிடைத்தது. அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த பதிவை வெளியிட்டவரின் பின்னணியை ஆய்வு செய்தோம். பா.ஜ.க –வில் வேலை பார்க்கிறேன் என்று அவர் தன்னை குறிப்பிட்டுள்ளார்.

INDRA 3.png

நாம் மேற்கொண்ட ஆய்வில் நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்,

1) பெரோஸ்காந்தி இஸ்லாமியர் இல்லை. அவர் ஒரு பார்சி.

2) பார்சி சமயத்தவரான பெரோஸ் காந்தியைத் திருமணம் செய்ய இந்திரா காந்தி இஸ்லாமியராக மதம் மாறவில்லை.

3) இந்து முறைப்படிதான் இந்திரா காந்தி திருமணம் நடந்துள்ளது.

4) மராத்தியர்களின் ஆட்சி ஆப்கானிஸ்தான் வரை இல்லை. இன்றைய, பாகிஸ்தான் வரை மட்டுமே பரவியிருந்தது.

5) மராத்தியர் ஆட்சியில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படவில்லை. பல போர்களில் இஸ்லாமிய அரசர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

6) மராத்தியர்களின் வீரத்தை அரசு மறைக்கவில்லை. ரயில், விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களுக்கு மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜியின் பெயரை சூட்டி பெருமைப்படுத்தியுள்ளது.

7) இந்திய – பாகிஸ்தான் பிரிவினையை காந்தி ஏற்கவில்லை.

8) அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ வேண்டும், வன்முறையைக் கைவிட வேண்டும் என்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு போலியானது, விஷமத்தனமானது, வரலாற்றைத் திரித்துக் கூறும் வகையில் உள்ளது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இஸ்லாமியராக மாறி பெரோஸ் காந்தியை திருமணம் செய்த இந்திரா! – 77 ஆண்டுகள் கழித்து சர்ச்சையை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Praveen Kumar 

Result: False