
ஸ்டாலின் மகள் வீட்டில் இருந்து கட்டக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தந்தி டிவி-யில் செய்தி வெளியானதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
தந்தி டிவி-யில் வெளியான செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை” என்று இருந்தது. மேலும் வீடியோவில் பேசும் நபர், “செந்தாமரை வீட்டில் காலை 7 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக துணை ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நடந்து வருகிறது.
காலையில் இருந்து நான்கு இடங்களுக்கு மேல் சோதனை நடந்து வருகிறது” என்று கூற பின்னணியில் கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்டது போன்று காட்சிகள் காட்டப்படுகின்றன. பின்னர் நீலாங்கரையில் உள்ள செந்தாமரை வீடும் காட்டப்படுகிறது. நிலைத் தகவலில், “ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Kanchi B. Venkatesan என்பவர் 2021 ஏப்ரல் 2 அன்று பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வீட்டில் ரூ.1.36 லட்சத்தைக் கைப்பற்றியதாகவும் அதை அவர்களிடமே திருப்பி அளித்துவிட்டதாகவும் வருமான வரித்துறை அளித்த ரசீதும் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இதுதான் செந்தாமரையின் வீடு, அவரது வீட்டில் சிக்கிய பணம் என்று ஏராளமான வதந்திகள் சமூக ஊடகங்களில் வைரல் ஆக பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் உண்மை கண்டறியும் ஆய்வும் வெளியிடப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: samayam.com I Archive
இந்த நிலையில் தந்தி டி.வி வெளியிட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் தந்தி டிவி நிருபர் பேசுவது போல உள்ளது. ஆனால் குரலும் வாய் அசைப்பும் ஒத்துப்போகவில்லை. எனவே, இந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுளில் தேடியபோது கட்டுக்கட்டாக பணம் எடுத்தது போல் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் 2018ம் ஆண்டு நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர் வீட்டில் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. இது தொடர்பாக எக்கனாமிக் டைம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான வீடியோவும் நமக்கு கிடைத்தது.
சபரீசன் – செந்தாமரை வீட்டில் நடந்த ஐடி ரெய்டு தொடர்பாக தந்தி டிவி வெளியிட்ட வீடியோவை தேடினோம். தந்தி டிவி ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தை பார்த்தபோது, இந்த வீடியோ தாங்கள் வெளியிட்டது இல்லை “FAKE” என்று குறிப்பிட்டு மறுப்பு வெளியிட்டிருந்தது தெரிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ போலியானது என்பது உறுதியானது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2
நம்முடைய ஆய்வில், செந்தாமரை – சபரீசன் வீட்டில் இருந்து ரூ.1.36 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் அதை அவர்களிடமே வருமான வரித்துறையினர் திருப்பி அளித்துவிட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. வீடியோவில் உள்ள பணம் கட்டுக்கட்டாக கிடக்கும் காட்சி 2018ம் ஆண்டு நடந்த வேறு ஒரு வருமான வரித்துறை சோதனையின் போது எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. செந்தாமரை வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்தது போல் வெளியான செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என்று தந்தி டிவியும் உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது போல பரவும் தந்தி டிவி வீடியோ போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஸ்டாலின் மகள் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
