சூரத்தில் இருந்து நடந்து சென்ற குடும்பம் தற்கொலை செய்துகொண்டதா?- ஃபேஸ்புக் வதந்தி

Coronavirus இந்தியா சமூக ஊடகம் சமூகம்

கொரோனா ஊரடங்கு காரணமாக சூரத்திலிருந்து நடந்து சென்ற குடும்பம் ஒன்று பசி கொடுமை தாங்க முடியாமல் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ஏப்ரல் 6, 2020 அன்று இரா.செல்வ குமார் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவை சரவணன் என்பவர் 2020 மே 2ம் தேதி ஷேர் செய்துள்ளார். குடும்பமே தற்கொலை செய்துகொண்ட படத்தில் போட்டோஷாப் முறையில் எழுதப்பட்ட போட்டோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “சூரத்திலிருந்து நடந்து சென்றபோது பசிக்கொடுமை தாங்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட மூன்று பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தனர். இந்திய அரசாங்கமே இந்த மூன்று பேரை கொலை செய்துவிட்டது. 

இதையெல்லாம் ஊடகம் மற்றும் அரசாங்கம் இதை காட்டாது அவர்களுக்கு தெரிந்தது மணி அடிப்பது, விளக்கு புடிப்பது. அது மட்டும்தான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை 5200க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். தொடர்ந்து ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

ஊரடங்கு காரணமாக வாழ வழியின்றி ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். தற்போது மூன்றாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பலரும் நடந்தே ஊருக்கு சென்றனர். அப்படி சென்றவர்களில் பலர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் குஜராத் மாநிலம் சூரத் அருகே எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். சூரத்தில் இருந்து நடந்து சென்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த சம்பவம் சூரத்தில் நடந்ததாக கருத முடியாது. இருப்பினும் குஜராத்தில் நடந்து சென்ற தொழிலாளர் குடும்பம் ஏதும் தற்கொலை செய்து கொண்டதா என்று கூகுளில் கீ வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2019 மார்ச் 9ம் தேதி இந்த புகைப்படத்தை முகப்பு படமாக (Thumbnail) வைத்து யூடியூப் வீடியோ ஒன்று வெளியாகி இருப்பது தெரிந்தது. ஆனால், அந்த வீடியோவில் இந்த இந்த புகைப்படம் இருந்ததே தவிர அது பற்றிய தகவல் இல்லை. பாடலை ஒலிக்கவிட்டிருந்தனர். எனவே, இந்த புகைப்படத்துக்கும் ஊரடங்குக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது. 

தொடர்ந்து தேடியபோது பலரும் இந்த படத்தை சில ஆண்டுகளாக ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது. ஆனால், இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்று கண்டறிய முடியவில்லை. கூகுளில் பல்வேறு கீ வார்த்தைகளை பயன்படுத்தி தேடியபோதும், ரிவர்ஸ் இமேஜ் தேடல்களில் தேடியபோதும் இந்த புகைப்படம் பற்றிய உண்மை விவரம் கிடைக்கவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு இந்த புகைப்படத்தை 2018ம் ஆண்டு நாக்பூர் டுடே இணையதளம் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. 

nagpurtoday.inArchived Link

அதில், வர்தா மாவட்டத்தில் குழந்தையைக் கொலை செய்துவிட்டு, கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டதாகவும் குடும்ப தகராறு மற்றும் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் குறிப்பிட்டதாகவும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

நம்முடைய ஆய்வில்,

குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட இந்த புகைப்படம் சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள், 2018ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் வர்தாவில் தற்கொலை செய்துகொண்டவர்கள் என்று வெளியான செய்தி கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஊரடங்கு காரணமாக சூரத்தில் இருந்து நடந்து சென்ற குடும்பம் பசி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சூரத்தில் இருந்து நடந்து சென்ற குடும்பம் தற்கொலை செய்துகொண்டதா?- ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •