FactCheck: மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்?- தவறான புகைப்படங்களால் குழப்பம்!
‘’மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – சபரீசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதேபோல, மற்றும் சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அவற்றையும் கீழே இணைத்துள்ளோம்.
உண்மை அறிவோம்:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – அவரது கணவர் சபரீசன் ஆகியோர் வசிக்கும் சென்னை நீலாங்கரை வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சட்டமன்ற தேர்தல் 2021 நெருங்கிய சூழலில் நடைபெற்ற இந்த சோதனை பல தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தாமரை – சபரீசன் வீடு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற இந்த வருமான வரிச் சோதனையில், கணக்கில் வராத பணம் அல்லது நகைகள் என எதுவுமே கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. வருமான வரித்துறையின் இந்த திடீர் சோதனை ஆளுங்கட்சிக்கு (அதிமுக – பாஜக கூட்டணி) எந்த பலனும் தரவில்லை என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இத்தகைய சூழலில்தான், மேற்கண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
உண்மையில், இவை செந்தாமரை – சபரீசனுக்குச் சொந்தமான இடங்களில் நிகழ்ந்த வருமான வரிச் சோதனையுடன் தொடர்புடையவை இல்லை.
இதன்படி, முதலில் உள்ள புகைப்படம், கடந்த 2019ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வருமான வரிச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணம்.
இதுபற்றி அப்போதே பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
இதேபோல மற்ற புகைப்படமும், சில ஆண்டுகளாகவே இணையத்தில் பகிரப்படும் ஒன்றுதான்.
அடுத்தப்படியாக, ஸ்டாலின் மகள் வீடு என்று கூறப்படும் புகைப்படம் உண்மைதான். அதில் மாற்றுக் கருத்தில்லை.
இதேபோல, இன்னொரு ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்களும், 2018ம் ஆண்டில் சென்னையில் உள்ள Ms SPK and Company எனும் தனியார் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது, கிடைத்த பணம், நகைகள் தொடர்பானது. இதுபற்றி ஊடகங்களில் வெளியான செய்தி, வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பான பழைய புகைப்படங்களை எடுத்து, திமுக தலைவர் மகள் செந்தாமரை – சபரீசன் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் என்று கூறி வதந்தி பரப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்?- தவறான புகைப்படங்களால் குழப்பம்!
Fact Check By: Pankaj IyerResult: False