
ரஷ்யா – உக்ரைன் போரில் வீழ்த்தப்பட்ட விமானம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது போன்றும், விமானத்தில் இருந்து தாக்குதல் நடப்பது போலவும், பதிலுக்கு தரையில் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் நடப்பது போன்றும் பிரேக்கிங் நியூஸ் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Fight Ukraine vs Russia விமானம் ஒன்று உக்ரைன் ரஷ்யா போரில் விமானம் சுட்டு விழுத்தும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை தமிழ் நாதம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். இதையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்து வரும் போரை மையப்படுத்தி சமூக ஊடகங்களில் பதிவுகள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. விமானம் தாக்கப்பட்டது, நகரம் தாக்கப்பட்டது என்று பகிரப்படும் பல வீடியோக்கள் போலியாக உள்ளன. அந்த வகையில் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் தரையில் இருந்து செலுத்தப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்குதலில் விமானம் தாக்கப்படும் வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த வீடியோ ArmA 3 என்ற போர் தொடர்பான வீடியோ கேம் வீடியோ என்பது தெரியவந்தது. அந்த வீடியோவை Compared Comparison என்ற யூடியூப் பக்கம் 2021 ஜனவரி 1ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது. ArmA 3 என்பது விமான எதிர்ப்பு ஏவுகணை வீடியோ கேம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் வீடியோகேம் வீடியோவை வைத்து உக்ரைனில் ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் மூலம் இந்த வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரஷ்யா – உக்ரைன் போர் காட்சி என்று பகிரப்படும் வீடியோ ArmA 3 என்ற வீடியோ கேமில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ரஷ்ய போர் விமானங்கள் மீது உக்ரைன் நடத்திய எதிர் தாக்குதல் வீடியோவா இது?
Fact Check By: Chendur PandianResult: False
