
1921ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலையத்தின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Facebook I Archived
1940 – 50களில் எடுக்கப்பட்ட விமானநிலையம் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், சொக்கநாதர் ஏர்போர்ட் மதுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “1921 இல் மதுரை ஏர்போர்ட்டின் அழகிய தோற்றம்! அப்போது இதன் பெயர் “சொக்கநாதர் விமான நிலையம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
1921ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமானநிலையத்தின் புகைப்படம் என்று குறிப்பிட்ட வரை சந்தேகம் எழவில்லை. அப்போது அதன் பெயர் சொக்கநாதர் விமான நிலையம் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இந்த புகைப்பட பதிவு தவறான தகவலை கொண்டிருக்கலாம் என்று ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
தமிழ்நாட்டின் பரபரப்பான விமான நிலையங்கள் என்றால் அது சென்னை, கோவை, திருச்சிதான். மதுரை இவற்றுக்குப் பின்புதான் வந்தது. எனவே, முதலில் மதுரை விமானநிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: aai.aero I Archive
இந்திய விமானநிலைய ஆணையத்தின் இணையதளத்தில் மதுரை விமானநிலையம் தொடங்கப்பட்டது பற்றிய தகவல் நமக்குக் கிடைத்தது. அதில், 2ம் உலகப்போரின் போது 1942ம் ஆண்டு இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ராயல் ஏர் ஃபோர்சின் விமான தளமாக தொடங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு பயணிகள் விமானநிலையமாக 1952ல் அது மாற்றப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 1921ம் ஆண்டு மதுரையில் விமானநிலையமே இல்லை என்பது தெளிவாகிறது.
அடுத்ததாக இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடியபோது, பெங்களூரு விமானநிலையம் என்று குறிப்பிட்டு வெளியான செய்திகள், பதிவுகள் நமக்குக் கிடைத்தன. பெங்களூரு எச்.ஏ.எல் ஏரோஸ்பேஸ் மியூசியத்தில் இந்த புகைப்படம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்று flickr.com தளத்தில் இந்த புகைப்படத்தை ஒருவர் 2007ம் ஆண்டு இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
உண்மைப் பதிவைக் காண: flickr.com
மதுரை விமானநிலையம் 1952ம் ஆண்டு தான் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அப்படி இருக்க 1921ம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம் என்பது தவறான தகவல் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த புகைப்படம் பெங்களூரு பழைய விமானநிலையத்தின் புகைப்படம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பெங்களூரு பழைய எச்.ஏ.எல் விமானநிலையத்தின் புகைப்படத்தை மதுரை விமானநிலையத்தின் பழைய புகைப்படம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:1921-ல் மதுரை விமானநிலையம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
