ஒருவர் விபத்தில் இறந்தால் அரசு 10 மடங்கு நஷ்ட ஈடு தர வேண்டும்: உண்மை என்ன?

சமூக ஊடகம்

‘’ஒருவர் விபத்தில் உயிரிழந்தால், அவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டப்படி, அவருடைய வருட வருமான அடிப்படையில் 10 மடங்கு பணத்தை அரசு வழங்க வேண்டும்,’’ என்ற ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived Link

ஏப்ரல் 28ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு நல்ல செய்தி பகிரலாமே எனக் கூறி, ஒருவர் விபத்தில் இறந்தால்… அவர் தொடர்ந்து 3 வருடம் வருமான வரி செலுத்தி இருந்தால், அவருடைய வருட வருமான அடிப்படையில் 10 மடங்கு பணத்தை அந்த குடும்பத்திற்கு அரசு கொடுக்க வேண்டும் என்பது சட்டம், என்று எழுதியுள்ளனர். இதனை உண்மை நம்பி ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
முதலில் இது உண்மை செய்திதானா என அறிய, மோட்டார் வாகனச் சட்டம் 166வது பிரிவு என்ன சொல்கிறது என்ன விவரத்தை தேடிப் பார்த்தோம். அதன் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

ஆனால், இதில் மத்திய அரசு நேரடியாக, ஒருவர் விபத்தில் உயிரிழந்தால், அவரது ஆண்டு வருமானம்போல, 10 மடங்கு பணம் தரவேண்டும் என சொல்லப்படவில்லை. மேலும், விபத்து இழப்பீடு பெற வேண்டும் எனில், விபத்து ஏற்படுத்திய நபர் ஒத்துழைக்காத பட்சத்தில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம். அங்கேயும் உரிய நீதி கிடைக்காதபட்சத்தில்தான் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்.
அதற்குரிய ஆவணங்களும், நடைமுறைகளும் ஏராளம் உள்ளன. இதுபற்றிய ஆதார விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

இவ்வளவும் செய்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தால், இதுபற்றி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்திற்கு பதில் சொல்லும்படி, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பும். இதில் எங்கேயும் மத்திய அரசு நேரடியாக வந்து பதில் சொல்ல தேவையில்லை.

மத்திய அரசுக்கும், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுதவிர, இந்தியாவில் அதிகம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்க நேரிடுவதால், வருமான வரி செலுத்துவதன் அடிப்படையில், உரிய இழப்பீடு வழங்க, மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என, உச்சநீதிமன்றம் பரிந்துரை மட்டுமே செய்துள்ளது. அரிதினும் அரிதாக, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அவரது வருட வருமானத்தைப் போல, 3 மடங்கு அதிக தொகையை வழங்கும்படி மட்டும் ஒருமுறை உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை யாரோ ஒருவர் பரப்பிவிட, அதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்துள்ளனர்.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற உறுதி செய்யப்படாத, தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:ஒருவர் விபத்தில் இறந்தால் அரசு 10 மடங்கு நஷ்ட ஈடு தர வேண்டும்: உண்மை என்ன?

Fact Check By: Parthiban S 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •