
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 800 ஆக்சிஜன் படுக்கை வசதி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரம்மாண்ட அரங்கில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் ஆயிரம் படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது இதில் 800 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை I Love Pudukkottai என்ற ஃபேஸ்புக் பக்கம் மே 13, 2021 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கை ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி அங்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மே 13, 2021 நிலவரப்படி நந்தனம் வர்த்தக மையத்தில் 360 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை தயார் நிலையில் உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

அசல் பதிவைக் காண: dailythanthi.com I Archive
இந்த நிலையில், சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் பா.ஜ.க-வினர் ஏற்படுத்திய கொரோனா குவாரன்டைன் மையம் என்று இதே படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. எனவே, எது உண்மை என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்தியா டுடே உள்ளிட்ட பல இதழ்களின் இணையதள பக்கத்தில் இந்த புகைப்படம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள குவாரன்டைன் மையம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive
இது தொடர்பாக வீடியோ கிடைக்கிறதா என்று பார்த்தோம். போபாலில் உள்ள மோதிலால் நேரு விளையாட்டு அரங்கில் பாரதிய ஜனதா கட்சி, மாதவ் சேவா கேந்திரா ஆகியவை இணைந்து அமைத்திருந்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா குவாரன்டைன் மையத்தை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் திறந்து வைத்தார் என்று வீடியோக்களும் கிடைத்தன. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உள்ளது போன்று படுக்கைகள் இருப்பதைக் காண முடிந்தது.
சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் படுக்கை வசதி தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை தேடினோம். பல ஊடகங்களும் சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் மையம் தொடர்பான படம், வீடியோக்களை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதன் மூலம் இந்த புகைப்படம் நந்தனம் வர்த்தக மையத்தில் எடுக்கப்பட்டது இல்லை, போபாலில் எடுக்கப்பட்டது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
போபாலில் பாரதிய ஜனதா கட்சி உருவாக்கிய கொரோனா குவாரன்டைன் மையத்தின் படத்தை சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் என்று தவறாக பகிரப்படுவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதியா?- இது போபால் படம்!
Fact Check By: Chendur PandianResult: False
