FACT CHECK: இந்து அறநிலையத் துறையும் பகவானும் கண்டுகொள்ளாத கோவில் அர்ச்சகர்! – விஷம ஃபேஸ்புக் பதிவு

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

இந்து அறநிலையத் துறையும் இறைவனும் கண்டுகொள்ளாத அர்ச்சகர் என்று ஒரு முதியவர் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

வயதான அர்ச்சகர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்து அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பதில்லை . கிராமத்தில் தட்டு வருமானம் இல்லை . இறைவனும் கண்டுகொள்ளவில்லை . வயது முதுமை. பெரிய கோவில்களில் நடப்பதும் பெரிய பெரிய படிகளில் ஏறி இறங்குவதும் முன்போல் முடியவில்லை . ஆனால் தான் வராவிட்டால் பகவான் பட்டினி கிடப்பானோ என்ற கவலை . அதனால் தான் இருக்கும்வரை பகவான் கைவிட்டாலும் பகவானை கைவிடுவதில்லை என்று வாழும் மகான்கள் பலர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Vijayaraghavan Lakshmi Narasimhan என்பவர் 2020 நவம்பர் 18ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்து அறநிலையத் துறை சம்பளம் கொடுக்கவில்லை, இறைவனும் கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. பகவான் கைவிட்டாலும் பகவானை கைவிடுவதில்லை என்று இந்த பெரியவர் வாழ்ந்து வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்ற பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

பலரும் இந்த அர்ச்சகர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது போல தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். அறநிலையத் துறை ஊழியர் ஒருவர் இவரைப் பற்றிய தகவலை அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு தகவலை அளிக்கத்தான் யாரும் இல்லை.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

எனவே, இந்த வயதான அர்ச்சகர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆய்வை மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது. கர்நாடக மாநிலம் ஹம்பியில் இந்த முதிய அர்ச்சகர் இருப்பதாக நமக்கு செய்திகள் பல கிடைத்தன.

ஹம்பியில் உள்ள படாவி லிங்கா கோவிலில் இவர் 40 ஆண்டுகளாக பூஜை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த முதியவரின் பெயர் கே.என்.கிருஷ்ணா பட்.  சிவமோகாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இந்த அர்ச்சகர் 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்துள்ளார். தினமும் காலை தன்னுடைய வசிப்பிடத்திலிருந்து இந்த கோவிலுக்கு வருவார். அவரை உள்ளூர் வாசிகள் ராம் சிங், ஆரிஃப், ஆரிஃபின் தந்தை அப்பாஸ் என பலரும் தங்கள் இருசக்கர வாகனங்களில் அமர வைத்து அழைத்து வருவார்கள். பூஜைகள் முடிந்து மாலை வரை இருப்பார். பிறகு யாரிடமேனும் உதவி பெற்று வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அசல் பதிவைக் காண: newindianexpress I Archive 1 I theyouth.in I Archive 2 I tamil.samayam.com I Archive

இந்த கோவிலை அனோகுன்டி விஜயநகர அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருகின்றனர். அக்குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவ ராயா இது குறித்து கூறுகையில், “1980களின் தொடக்கத்தில் ஹம்பியை பார்வையிட காஞ்சி பெரியவர் வருகை தந்தார். அப்போது சிவலிங்கம் பூஜை செய்யப்படாமல் இருப்பதைக் கண்ட அவர் என் தந்தை அச்சுதா தேவராயாவிடம் ஒரு அர்ச்சகரை நியமித்து அவருக்கு ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் அரிசி மற்றும் தொகையை வழங்கி வழிபாட்டை தொடங்க கேட்டுக் கொண்டார். அன்றிலிருந்து வழிபாடு தொடங்கி நடந்து வருகிறது. நாங்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவருக்கு பணம் செலுத்துகிறோம். மகாசிவராத்திரி அன்று அவருக்கு பணம் கொடுத்தேன்” என்று கூறியதாக 2019ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன் மூலம், இந்த கோவில் தமிழகத்தில் இல்லை. தமிழக அறநிலையக் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இல்லை என்பது உறுதியாகிறது.

கர்நாடகாவில் விஜயநகர அரச குடும்பத்தினர் இந்த கோவில் அர்ச்சகரை நியமித்து அவருக்கு சம்பளம் வழங்கி வருவது தெரியவருகிறது.

இந்த கோவில் கர்நாடகாவில் உள்ளது, விஜயநகர அரச குடும்ப வாரிசுகள் இவருக்கு நிதி உதவி செய்து வருகின்றனர் என்ற தகவலை சொல்லாமல், தெய்வமும் அறநிலையத் துறையும் இவரைக் கண்டுகொள்ளவில்லை என்று தவறான தகவலை வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் இந்த பதிவு உண்மையும் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்து அறநிலையத் துறை என்று கூறியதால் இந்த பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த அர்ச்சகர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை தகுந்த ஆதாரங்கனுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்து அறநிலையத் துறையும் பகவானும் கண்டுகொள்ளாத கோவில் அர்ச்சகர்! – விஷம ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context