கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த பாஜக பிரமுகரை போலீசார் தெடி வருகின்றனர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2

ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று எக்ஸ் தளம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம்; விஷச்சாராயம் காய்ச்சி, விற்பனை செய்த பா.ஜ.க நிர்வாகி ரவி உட்பட 8க்கும் மேற்பட்டோர் தலைமறைவு!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கள்ளக்குறிச்சியில் விஷ கள்ளச்சாராயம் குடித்த 42 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளி சின்னதுரை உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் அரசியல் பின்னணி பற்றி எல்லாம் இதுவரை போலீஸ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் சாராயத்தை விற்பனை செய்தது திமுக பிரமுகர் என்று எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் விற்பனை செய்தது அ.தி.மு.க, பா.ஜ.க பிரமுகர்கள் தான் என்று ஆளும்கட்சி ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் சண்டையிட்டு வருகின்றனர். இந்த சூழலில் பாஜக நிர்வாகி ரவி தலைமறைவு என்று விகடனில் செய்தி வந்தது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு இல்லை. அதன் இணையதளத்தில் வெளியான செய்திகளைப் பார்த்தோம். எதிலும் பாஜக நிர்வாகி ரவி தலைமறைவு என்ற செய்தி கிடைக்கவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள, விகடன் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கள்ளச்சாராயம் அருந்தி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக பாஜக நிர்வாகி ரவி தலைமறைவானார் என்று பரவும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான பாஜக கள்ளச்சாராய வியாபாரி தலைமறைவு என்று பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கள்ளச்சாராயம் விற்ற பாஜக நிர்வாகி தலைமறைவு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False