
கேமரா நுணுக்கங்களை அமர் பிரசாத் ரெட்டிதான் கற்றுக்கொடுத்தார் என்று பாஜக மாவட்ட தலைவர் அகோரம் வாக்குமூலம் அளித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive
மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இரகசிய கேமரா கையாளும் நுணுக்கங்களை அமர்பிரசாத்தான் எனக்கு கற்றுக்கொடுத்தார் – அகோரம் வாக்குமூலம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆபாச வீடியோவை வெளியிடப்போவதாகக் கூறி தருமபுரம் ஆதீனத்தைப் பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அகோரம் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை போலீஸார் கைது செய்ததாக எந்த செய்தியும் இல்லை. அப்படி இருக்கையில் அவர் வாக்குமூலம் அளித்தார் என்ற தகவல் நம்பும் வகையில் இல்லை.
மேலும், இந்த நியூஸ் கார்டு மாலை மலர் வெளியிடும் வழக்கமான நியூஸ் கார்டு போல இல்லை. சில வித்தியாசங்களை காண முடிகிறது. பார்க்கும் போதே போலியானது என்று தெரிகிறது. இருப்பினும் இதையும் பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர். இது போலியானதுதான் என்பதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம்.
முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை மாலை மலர் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. மேலும் ஆபாச வீடியோ மிரட்டல் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் அதில் இல்லை. அதன் இணையதள பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். போலீஸ் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த செய்தி மட்டுமே இருந்தது.

இதுதொடர்பாக மாலை மலர் ஆசிரியர் குழுவைத் தொடர்புகொண்டோம். மாலை மலர் ஆசிரியர் குழு நிர்வாகி ஒருவருக்கு வாட்ஸ்அப்-ல் இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு, என்று உறுதி செய்தார்.
முடிவு:
ஆதீனத்தை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தனக்கு கேமராவை கையாளும் நுணுக்கங்களை அமர் பிரசாத் ரெட்டி கற்றுக்கொடுத்தார் என்று போலீசில் வாக்குமூலம் அளித்தார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘கேமரா கையாள அமர் பிரசாத் ரெட்டி கற்றுக்கொடுத்தார்’ என்று பாஜக நிர்வாகி அகோரம் வாக்குமூலம் அளித்தாரா?
Written By: Chendur PandianResult: False
