FACT CHECK: தி.மு.க பிரச்சார வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பறந்ததாக வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தி.மு.க பிரசார வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தி.மு.க வேட்பாளர் ஒருவரின் வாக்கு சேகரிக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பச்சை நிற பின்னணியில் வெள்ளை நிற பிறை நிலவு நட்சத்திரம் சின்னம் இருக்கும் கொடியின் படம் சிவப்பு நிறத்தில் அம்பு குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திமுக பிரச்சார வாகனத்தில் பாகிஸ்தான் கொடி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Ajay Krishna என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மார்ச் 16 அன்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாகிஸ்தான் நாட்டுக்கு தி.மு.க ஆதரவு தெரிவிப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி கூறினார் என்றும், தி.மு.க-வுக்கு பணம் கொடுத்தது உண்மை என்று தாவூத் இப்ராகிம் கூறினான் என்றும் பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து பல உண்மை கண்டறியும் ஆய்வுகளை நாம் வெளியிட்டு வந்துள்ளோம்.

அதே போல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடி என்று குறிப்பிட்டுத் தொடர்ந்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதையும் நாம் ஆய்வுக் கட்டுரை மூலம் தெளிவுபடுத்தி வந்துள்ளோம்.

இந்த நிலையில் மீண்டும் அதே போன்று ஒரு வதந்தியை புதிதாக சிலர் பரப்பி வருவது தெரிந்தது. ஆனால், படத்தில் உள்ளவர் யார், எந்த தொகுதி வேட்பாளர் என எந்த ஒரு தகவலும் இல்லை. இது குறித்து தி.மு.க முக்கிய பிரமுகர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், “இந்த படத்தில் இருப்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி. இவர் திருவள்ளூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன். தற்போதை எம்.எல்.ஏ-வும் கூட” என்றார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அவர் கூறியதை உறுதி செய்ய வி.ஜி.ராஜேந்திரன் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அவர் இந்த புகைப்படத்தை மார்ச் 16, 2021 அன்று காலை பதிவிட்டுள்ளது தெரிந்தது. அதே நேரத்தில் இந்த கொடியின் முழு படமும் நமக்குக் கிடைக்கவில்லை. 

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தொடர்ந்து அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தபோது அவருடைய பிரசார வாகனத்தின் முழு காட்சியும் இடம் பெற்ற வீடியோ நமக்குக் கிடைத்தது. அந்த வீடியோவின் 1.01 நிமிடத்தில் வாகனத்தில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் கொடிகளைக் காட்டுகின்றனர். அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக் கொடி தெளிவாகத் தெரிவதைக் காண முடிந்தது. 

Archive

பாகிஸ்தான் நாட்டுக் கொடியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக் கொடியையும் ஒப்பிட்டு கீழே கொடுத்துள்ளோம். மேலும், இது தொடர்பாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எச்.வசந்த குமார் பாகிஸ்தான் கொடியுடன் பிரசாரம் செய்தார் என்று வதந்தி பரவிய போது இரண்டும் வெவ்வேறு கொடிகள் என்பதை விரிவாக விவரித்திருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக் கொடியை பாகிஸ்தான் கொடி என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தி.மு.க பிரசாரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக் கொடி இருப்பதை பாகிஸ்தான் கொடி என்று விஷமத்தனமாக சிலர் பகிர்ந்து வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தி.மு.க பிரச்சார வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பறந்ததாக வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •