
நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளி குணமான பின்பு, கொரோனா வார்டில் இருந்து வெளிவரும் மருத்துவர்கள் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
ராணுவத்தில் பயிற்சி முடித்து வெளியேறும் வீரர்கள் போன்று இருவர் இருவராக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் வருகின்றனர். கேமரா அருகே வரும்போது அவர்கள் தலையில் அணிந்திருந்த பாதுகாப்பு தொப்பியை கழற்சி வீசி செல்கின்றனர். வீடியோவின் கடைசியில் விசிட் இத்தாலி என்று வந்தது.
நிலைத் தகவலில், “நியூசிலந்து ல கடைசி கொரோனா நோயாளி குணமான பின்பு, கொரோனா வார்டில் இருந்து வெளிவரும் சுகாதார பணியாளர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை Jamesha Habib என்பவர் 2020 ஜூன் 11ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா தொற்று இல்லாத நாடுகளுள் ஒன்றாக சமீபத்தில் நியூசிலாந்து மாறியது. கடைசி கொரோனா நோயாளிக்கும் சிகிச்சை முடித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அந்த கடைசி நோயாளி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் வரிசையாக வெளியேறும் காட்சி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் வீடியோவில் விசிட் இத்தாலி என்று இருப்பதால் சந்தேகம் ஏற்பட்டது.
வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிசர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது எந்த ஒரு பதிவும் நமக்கு கிடைக்கவில்லை. அதனால் வீடியோவில் உள்ள விசிட் இத்தாலி என்ற லோகோவை வைத்து தேடினோம். அதே பெயரில் பல பக்கங்கள், குழுக்கள் என இருந்ததால், ஒவ்வொன்றாகப் பார்த்தோம். நம்முடைய தேடலில் கடந்த ஜூன் 8ம் தேதி இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், மட்டேரா (Matera) மருத்துவமனையின் கொரோனா வார்டு மூடப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.
Matera என்பது மருத்துவமனையின் பெயரா அல்லது ஊரின் பெயரா, அது எங்கே உள்ளது என்று கூகுளில் தேடினோம். அப்போது அது இத்தாலியில் பஸ்லிகாடா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் என்பது தெரிந்தது.
இதன் மூலம் இந்த வீடியோ நியூசிலாந்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மட்டேரா நகர மருத்துவமனையில் கொரோனா வார்டு மூடப்பட்டதால் மருத்துவர்கள் மகிழ்ச்சியாக வெளியேறுவது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளி குணமான பின் வெளியே வரும் மருத்துவர்கள்- வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Partly False

I’m very sorry for that false video