நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து வண்ண பொடி வெடியை வெடிக்க வைத்த நபர்களுள் ஒருவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மைசூரு பாஜக எம்.பி-யுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "நேற்று நாடாளுமன்றத்தில் புகுந்து கோலி கொண்டாடிய தம்பியும்... நம்ம நாட்டின் நம்.1 பையனும் ஒன்னா நிக்கும் காட்சி... இதுல இருந்து என்ன வெளங்கிச்சு உங்களுக்கு...???" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவானது 2023 டிசம்பர் 17ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

மக்களவையில் சிலர் நுழைந்து வண்ண பொடிகளை வெடிக்கச் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன் நினைவு நாள் அன்று இந்த வண்ணப் பொடி வெடி சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சிக்கிய நபருடன் அண்ணாமலை இருப்பதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வண்ண வெடியை வெடிக்கச் செய்தவர்கள் நாடாளுமன்றத்திற்குள் வர பாஸ் வழங்கியவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா. அவருடன் அண்ணாமலை இருக்கும் படத்தை பகிர்ந்து வெடி சம்பவத்தை நிகழ்த்திய நபருடன் அண்ணாமலை என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெரிந்தது. படத்தில் உள்ள நபர் தாக்குதல் நடத்தியவர்களுள் ஒருவர் இல்லை, பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி இந்த புகைப்படத்தை பிரதாப் சிம்ஹா தன்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் (எக்ஸ்) பக்கங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. அதில், "உண்மையான கர்நாடக சிங்கம் அண்ணாமலையை டெல்லியில் நேற்று சந்தித்த போது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நபருடன் அண்ணாமலை உள்ளார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

Archive

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு நாடாளுமன்றத்திற்குள் நுழைய பாஸ் வழங்கிய எம்.பி-யுடன் அண்ணாமலை என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால், தாக்குதல் நடத்திய நபர் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இந்த பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

நாடாளுமன்றத்தில் வண்ணப்பொடி தாக்குதல் நடத்திய நபருடன் அண்ணாமலை எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று பரவும் புகைப்படத்தில் இருப்பவர், தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஸ் வழங்கிய பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவருடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Misleading