FactCheck: மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகப் பரவும் வதந்தி

அரசியல் சமூக ஊடகம்

‘’மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இளம்பெண் ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சராமரியாக தாக்குவதோடு, அவரை சாலை நடுவே கீழே தள்ளி, உயிருடன் நெருப்பு வைத்து எரிக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு பதைபதைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால், இதனை சமூக வலைதளங்களில் பகிர்வோர் இது, மத்தியப் பிரதேசத்தில், கிறிஸ்தவ பெண் எரித்துக் கொல்லப்பட்ட காட்சி என்று கூறி தகவல் பகிர்கிறார்கள்.

எனவே, இது மத ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதால், இந்த வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி, வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு தகவல் அனுப்பியிருந்தார்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்தது என்று கூறினாலும், அதில் நடைபெறும் உரையாடல்களில், ஹிந்தியோ அல்லது வேறு எந்த இந்திய மொழியும் அடையாளம் காண முடியவில்லை. மேலும், வீடியோவில் உள்ள மக்களை பார்க்கும்போது, வட இந்தியர்களைப் போன்று இல்லை. சற்று வித்தியாசமாக இருந்ததால், நமக்கு சந்தேகம் எழுந்தது.

எனவே, வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, நாம் ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் தகவல் தேடினோம். அப்போது, இது தென்னமெரிக்காவில் அமைந்துள்ள கவுதமாலா நாட்டில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பானது என்று நமக்கு தெரியவந்தது.

இதன்படி, 2015ம் ஆண்டு முதலாக, இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கவுதமாலா நாட்டில் உள்ள ரியோ பிராவோ என்ற கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட இளம்பெண், வாடகை கார் டிரைவர் ஒருவரை கொன்றதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதன்பேரில், அந்த பெண்ணை, உள்ளூர் மக்கள் கடுமையாக தாக்கி நெருப்பிட்டு கொன்றதாக, போலீசார் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்திருக்கின்றனர்.

CNN Article LinkNews.com.au Video Link 

எனவே, 2015ம் ஆண்டில் கவுதமாலா நாட்டில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் தொடர்பான வீடியோ காட்சிகளை வைத்து, மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் தாக்கப்பட்டதாகக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகப் பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •