
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்குள் இரண்டு சிறுத்தைகள் நுழைந்தன என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பழைய கட்டிடத்திற்குள் இருந்து இரண்டு சிறுத்தைகள் வெளியே வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை Thalapathi Thiyagu Dmk Kovai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கோவை பாரதியால் பல்கலைக் கழகத்திற்குள் சிறுத்தைகள் நுழைந்தது என்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வனப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் காட்டு விலங்குகள் அங்கு நுழைவது பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகும். அதனால், இந்த வீடியோ உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது. இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பெங்களூரு பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த சிறுத்தைகள் என்று இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பது தெரிந்தது. மேலும் சிறுத்தைகள் எதுவும் நுழையவில்லை என்று கர்நாடக வனத்துறை உறுதி செய்த செய்தியும் நமக்கு கிடைத்தது.
தொடர்ந்து தேடிய போது, இந்த வீடியோ பற்றி வெளிநாட்டு ஊடகம் ஒன்றில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. போர்த்துகீசிய மொழியில் வெளியான செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம்.

உண்மைப் பதிவைக் காண: midiamax.uol.com.br I Archive
அதில், “பிரேசிலில் ஒரு பண்ணையில் உள்ள காலியான வீட்டுக்குள் நுழைந்த ஜாகுவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோவை dr.brunofernandesvet என்ற இன்ஸ்டாகிராம் ஐடி கொண்டவர் 2022ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி வெளியிட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் பிரேசில் நாட்டைச் சார்ந்த வீடியோவை எடுத்து, தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த சிறுத்தைகள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்குள் சிறுத்தைகள் நுழைந்தன என்று பரவும் வீடியோ பிரேசிலைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தைகள் நுழைந்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
