சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் பெண் ஒருவர் விழுந்த வீடியோவை குஜராத் மாடல் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com

சாலையில் சிறிது தேங்கியிருந்த தண்ணீர் அருகே பெண் ஒருவர் நடந்து வருகிறார். திடீரென்று அந்த இடமே அப்படியே கீழே இறங்கி, அதில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த பெண்மணி விழும் வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், "அச்சா தீன் குஜராத் மாடல் நண்பர்களே" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் பெண் ஒருவர் விழுந்த வீடியோவை குஜராத் மாடல் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. வட இந்தியாவில் தற்போது பருவக் காலம் என்பதால் மழை பொழிந்து வருகிறது. இந்த சூழலில் வட இந்தியாவில் நடந்தது போன்ற தோற்றத்தை இந்த வீடியோ பதிவு ஏற்படுத்துகிறது. எனவே, இது எங்கு எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் மற்றும் வேறு சில புகைப்படங்களின் பின்னணி, மூலங்களைக் கண்டறிய உதவும் இணையதளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் இந்த வீடியோவை 2022ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால் எதிலும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. பலரும் நகைச்சுவை என்று இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். இந்தோனேஷிய மொழியில் இந்த வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது. அதிலும் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை.

தொடர்ந்து தேடிய போது, போர்த்துகீசிய மொழியில் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பல ஊடகங்களும் இந்த வீடியோவுடன் கூடிய செய்தியை வெளியிட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அதில், இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: gooutside.com.br I itatiaia.com.br

பிரேசில் நாட்டின் சியாரா என்ற மாநிலத்தில் ஃபோர்த்தோலேசா, காஸ்காவேல் (Fortaleza, Cascavel) என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்தது என்றும் பள்ளத்தில் விழுந்த பெண்மணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த பெண்மணியின் பெயர் மரியா என்றும் அவர் அந்த பகுதியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்மணியிடம் பேட்டி எடுத்தும் சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

இவை எல்லாம் இந்த வீடியோ இந்தியாவில் நடந்தது இல்லை என்பதை உறுதி செய்தன. பிரேசில் நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை குஜராத் மாடல் என்று விமர்சிப்பதும் தவறானது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரேசிலில் பெண் ஒருவர் சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த வீடியோவை இந்தியாவில் நிகழ்ந்ததாக பலரும் தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குஜராத் மாடல்: சாலையில் விழுந்த பெண் என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False