ராகவேந்திரா மண்டபத்தை தர முடியாது என்று லதா ரஜினிகாந்த் கூறவில்லை!

Coronavirus அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு மண்டபங்கள் தேவைப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு அங்கு பராமரிப்பு பணி நடைபெற உள்ளது என்று லதா ரஜினிகாந்த் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

புதிய தலைமுறை நியூஸ் டிக்கரோடு, தினத்தந்தி முதல் பக்கத்தை இணைத்து புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி செய்தியில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்களில் முகாம்கள், பள்ளி, கல்லூரிகளில் 50 ஆயிரம் படுக்கைகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் கீழே, புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டில், “ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது – லதா ரஜினிகாந்த்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கீழ் பிரேக்கிங் நியூஸ்… கொரோனா: திருமண மண்டபங்களை கேட்கும் மாநகராட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook LinkArchived Link

ஃபேஸ்புக்கில் இது தொடர்பாக ஏதும் பதிவுகள் உள்ளதா என்று தேடினோம். அப்போது, “கொரோனா வார்டு கூடுதலாக அமைக்க அனைத்து திருமண மண்டபத்தை ஒப்படைக்க சொல்லிய நிலையில், ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது – லதா ரஜினிகாந்த். கொரோனாவில் உயிர் இழந்தவர்களுக்கு அடக்கம் செய்ய என் கல்லூரியில் இடம் தருகிறேன் – விஜயகாந்த்” என்று ஒரு புகைப்பட பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

நிலைத் தகவலில், யாருக்கு நல்ல மனசு என்று குறிப்பிட்டிருந்தனர். (முதலில் இதற்கான ஆதாரத்தை இவர்கள் வெளியிடவில்லை. கமெண்ட் பகுதியில் பலரும் ஆதாரம் கேட்டதால் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் இணைப்பை அளித்திருந்தனர்.) இதை மாற்றியோசி Mattriyoci என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மே 4ம் தேதி வெளியிட்டுள்ளது.  பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை கொரோனா தடுப்பு முகாம் அமைக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரஜினி கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களைத் தனிமைப்படுத்த கல்லூரி, பள்ளிகளில் சிறப்பு மையங்களை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. மண்டபங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று லதா ரஜினிகாந்த் அறிவிப்பு சமூக ஊடகங்களில் தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

முதலில் இது தொடர்பான அறிவிப்பு ஏதும் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் சமூக ஊடக பக்கங்களில் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு அறிவிப்பும் அவர்கள் பக்கங்களில் இல்லை. இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. 

Article LinkArchived Link

ராகவேந்திரா மண்டபத்தை சிகிச்சைக்கு அளிப்பதில் சிக்கல் : கொரோனா காலத்திலும் இந்த விளம்பர அரசியல் தேவையா ? என்று தலைப்பிட்டு கலைஞர் செய்திகள் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

“கொரோனா தனிமை வார்டுகளாக சென்னையில் உள்ள 750 மண்டபங்கள் பயன்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் கூறிய மறுநாளே தனது ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணியை தொடங்கியுள்ளார் லதா ரஜினிகாந்த்” என்று லீட் வைத்திருந்தனர்.

செய்தியின் உள்ளே பார்த்தோம். அதில் “சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பராமரிப்பு பணி காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது என ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

முதலில் ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஒரு மாதத்திற்கு முன்பு அறிவித்துவிட்டு தற்போது அதிலிருந்து பின் வாங்கி இருக்கிறார் ரஜினி” என்று குறிப்பிட்டிருந்தார்களே தவிர இது பற்றி எப்போது அறிவிப்பு வெளியானது, யார் வெளியிட்டது என்று உறுதியாக கூறாமல், செய்தி வெளியிட்டிருந்தனர். இதற்கு கண்டனம் என்று சமூக ஊடகங்களில் சிலர் வெளியிட்டிருந்த பதிவை சேர்த்திருந்தனர். மற்றபடி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் வெளியிட்டார்கள் என்று உறுதியாக எதுவும் கூறவில்லை.

புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு போல வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவி வருவதால் இது குறித்து அந்த தொலைக்காட்சியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர்கள் “பிரேக்கிங் நியூஸ், கொரோனா: திருமண மண்டபங்களை கேட்கும் மாநகராட்சி” என்ற பகுதி மட்டும் எங்களுடையது, லதா ரஜினிகாந்த் அறிவிப்பு என்று உள்ள பகுதி எங்களுடையது இல்லை. எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்” என்றனர். 

ரஜினிகாந்தின் கருத்தை அறிய அவரது பி.ஆர்.ஓ ரியாஸை தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர் இந்த தகவல் தவறானது என்று கூறினார்.

ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா பணிக்கு தர முடியாது என்று ரஜினி குடும்பத்தினர் யாரும் கூறவில்லை. இதுபற்றி ரஜினியும் விளக்கம் அளித்துள்ளார். தினகரன் நாளிதழில் கூட செய்தி வெளியாகி உள்ளது.

dinakaran.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

லதா ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

கலைஞர் செய்திகளில் வெளியான செய்திக்கு ஆதாரம் எதுவும் இல்லை.

லதா ரஜினிகாந்த் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ உறுதி செய்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மூன்று மாதங்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என்று லதா ரஜினிகாந்த் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ராகவேந்திரா மண்டபத்தை தர முடியாது என்று லதா ரஜினிகாந்த் கூறவில்லை!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply