4ஜி செல்போன் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு உத்தரவா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

4ஜி செல்போன்களின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்துமாறு செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று சத்யம் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “4ஜி செல்போன்களின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Sathiyam TV தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2022 அக்டோபர் 14ம் தேதி பதிவிட்டுள்ளது.

உண்மை அறிவோம்:

இந்தியாவில் 2022 அக்டோபர் 1ம் தேதி 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டும் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 5ஜி சேவை கிடைக்காத நிலையில், 3ஜி, 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகச் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மைப் பதிவைக் காண: Facebook I dailythanthi.com I Archive

தினத் தந்தி நாளிதழ் தன்னுடைய இணையதளத்தில் இதே செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், கேள்விக் குறியோடு இன்னும் உறுதி செய்யப்படாத செய்தி என்பது போன்று பகிர்ந்திருந்தது. ஆனால், சத்யம் தொலைக்காட்சியில் மத்திய அரசு உண்மையாகவே அறிவுறுத்தல் செய்திருப்பது போன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக தேடினோம்.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் அல்லது டிராய் இப்படி ஏதும் அறிவிப்பு செய்துள்ளதா என்று அதன் இணையதளங்களில் சென்று பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

பிஐபி எனப்படும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இப்படி ஏதேனும் பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளதா என்று அதன் இணையதளத்திற்குச் சென்று பார்த்தோம். ஆனால், அதிலும் நமக்கு அப்படி எந்த ஒரு அறிவிப்பும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் PIB Fact Check ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் வெளியான பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், “3ஜி, 4ஜி ஸ்மார்ட் போன் உற்பத்தியை நிறுத்தும்படி செல்போன் உற்பத்தியாளர்களை இந்திய அரசு கேட்டுக்கொண்டதாக பரவும் தகவல் தவறானது. அப்படி எந்த ஒரு வழிகாட்டுதலையும் இந்திய அரசு வழங்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

Archive

3ஜி, 4ஜி செல்போன் உற்பத்தியை நிறுத்த இந்திய அரசு அறிவுறுத்தல் என்று பரவும் செய்தி தவறானது இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமே உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் சத்யம் டிவி வெளியிட்ட செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

4ஜி செல்போன் தயாரிப்பை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதாக பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:4ஜி செல்போன் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு உத்தரவா?

Fact Check By: Chendur Pandian 

Result: False