
ஆகஸ்ட் 18ம் தேதி சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சத்பரதி சிவாஜியின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “AUG 18 சத்திரபதி வீர சிவாஜி. ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம் #chatrapathysivaji #veerasivaji #veersivaji #shreetv #poster #Aug18 #2022 #Media #shreetvmedia” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Shree TV என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 18ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெரும்பாலும் வரலாற்றில் இடம் பெற்ற தலைவர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாளில் பதிவுகள் வெளியாவது வழக்கம். சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் ஆகஸ்ட் 18 என்று குறிப்பிட்டு பதிவு ஒன்று வைரல் ஆக ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த தகவல் உண்மைதானா என்று கூகுளில் தேடிய போது, சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் பிப்ரவரி 19 என்று தெரிந்தது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: tifr.res.in I Archive
சத்ரபதி சிவாஜி பற்றித் தேடினோம். அப்போது 1630ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி அவர் பிறந்தார் என்று தகவல் கிடைத்தது. அதே நேரத்தில் அவர் ஏப்ரல் 6, 1627ல் பிறந்தார் என்றும் சிலர் கூறுவது உண்டு என்றும் சில பதிவுகள் கிடைத்தன. அதே போன்று சிவாஜி பிறந்த நாளை கணக்கிடுவதில் வேறு ஒரு குழப்பம் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அவர் பிறந்த போது ஜூலியன் நாட்காட்டி வரலாற்று ஆசிரியர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பிறகுதான் கிரகோரியன் நாட்காட்டிக்கு மாறினார்கள். ஜூலியன் நாட்காட்டிக்கும் கிரகோரியன் நாட்காட்டிக்கும் 10 நாள் வித்தியாசம் உள்ளது. அதன் அடிப்படையில் ஜூலியன் நாட்காட்டி படி சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் 19 பிப்ரவரி 1630. கிரகோரியன் நாட்காட்டி படி சிவாஜியின் பிறந்த நாள் மார்ச் 1, 1630 என்று குறிப்பிட்டிருந்தனர். இப்படி சில குழப்பங்கள் இருந்தாலும் எதுவும் சத்ரபதி சிவாஜி ஆகஸ்ட் மாதம் பிறந்தார் என்று குறிப்பிடவில்லை.

உண்மைப் பதிவைக் காண: maharashtra.gov.in I Archive
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜிக்கு மிகப்பெரிய அளவில் மரியாதை, கௌரவம் அளிக்கப்படுகிறது. அதனால் அந்த மாநில அரசின் அதிகாரப்பூர்வ சிவாஜி பிறந்த நாள் எது என்று பார்த்தோம். 2022 விடுமுறை நாள் பட்டியலில் பிப்ரவரி 19 என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive
அதே நேரத்தில் மராத்தி நாட்காட்டியின்படி மகாராஷ்டிரா அரசு 2022, மார்ச் 21ம் தேதி சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாடியதாகவும் செய்தி கிடைத்தது. அந்த செய்தியிலும் கூட கிரகோரியன் நாட்காட்டி அடிப்படையில் பிப்ரவரி 19ம் தேதி சிவாஜி பிறந்திருந்தாலும், இந்து நாட்காட்டி அடிப்படையில் பால்கன் மாதம் பால்கன் வாத்யாவின் மூன்றாவது திருதியா நாளில் (Falgun Vadya Trutiya, Shake 1551 Shukla Samvastar) சிவாஜியின் பிறந்த நாள் கொண்டாடுவது என்று அப்போது இருந்த சிவசேனா அரசு முடிவு செய்தது என்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் அன்றைய தினத்தில் கொண்டாடியது என்றும் செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: bbc.com I Archive
சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் எப்படி பிப்ரவரி 19 என்று முடிவு செய்யப்பட்டது என்று பிபிசி வெளியிட்டிருந்த கட்டுரையும் நமக்குக் கிடைத்தது. இவை எதிலும் ஆகஸ்ட் 18ல் சத்ரபதி சிவாஜி பிறந்தார் என்று கூறவில்லை. இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 18ம் தேதி சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பிப்ரவரி 19ம் தேதி மராத்திய மன்னர் சிவாஜியின் பிறந்த நாள் என்று மகாராஷ்டிரா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள சூழலில், ஆகஸ்ட் 18ம் தேதி சிவாஜி பிறந்த நாள் என்று தவறான தகவலை சமூக ஊடகங்களில் சிலர் பரப்பி வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஆகஸ்ட் 18 சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் என்று பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
