இஸ்லாமியருக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்எஸ்எஸ் தாக்கியதாக பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

இஸ்லாமிய குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்.எஸ்.எஸ் காவி வெறியர்கள் தாக்கியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பெண்மணி ஒருவர் உணவு அருந்துகிறார், அவர் அருகில் மற்றொரு பெண்மணி நிற்கும் புகைப்படத்தையும், நிற்கும் பெண்மணியைப் போல உள்ளவர் முகத்தில் ரத்தக் காயம் உள்ள படத்தையும் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “முஸ்லிம் குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணின் முகத்தை சிதைத்த ஆர்.எஸ்.எஸ் காவி வெறியர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “தன் வீட்டீல் தங்கியிருந்த முஸ்ஸிம் பெண்மணிக்கு சஹர் செய்ய உணவு கொடுத்தற்காக இந்த பாஸிச சங்கிகள் வயதான பெண்மணி என்று கூட பாராமல் காயபடுத்தி உள்ளனர். முஸ்ஸிம்களை வெறுப்பவர்கள்தான் உண்மையான இந்துவா? அடேய் சங்கிஈனபிறவிகளே உண்மையான இந்து என்பவர்கள் தன் வாசலில் கோலம் போடுதில் அரிசிமாவை பயன்படுத்துவார்கள் காரணம் என்னவென்றால் எறும்புக்கு அதன் மூலம் உணவு கிடைக்கும் என்பதற்காக தான் இவர்கள் தான் உண்மையான இந்துகள். உன் பாசிசத்தை திணிக்காதே அதுவே உன்னை அழிக்க போதுமானது .

அந்த வயதான பெண்மணியும் ஒரு இந்துதானே இரக்கமில்லையா?உங்களுக்கு? ஆடுங்கள் இன்னும் எத்தனை நாளைக்குதான் ஆட்டம் என்று பார்ப்போம். இரக்கம் என்றும் தோற்றுபோகாது வெறிதான் உங்களை அழித்து புதைத்துவிட போதுமானது…. அல்லாஹ்வின் நேசன் . Mp.ஹிதாயத்துல்லாஹ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை புதியதொரு மாற்றம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 27 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உணவு அருந்தும் புகைப்படத்தில் உள்ள பெண்ணும், முகத்தில் காயம் பட்ட பெண்ணும் பார்க்க ஒரே சாயலில் இருப்பதால் பலரும் இந்த படத்தை ஷேர் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்று எதையும் குறிப்பிடவில்லை. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

Archived Link

பெண் உணவு அருந்தும் புகைப்படம் சில நாட்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. அதில், ஜம்முவில் காஷ்மீர் பண்டிட் பெண்மணி காலையில் மூன்று மணிக்கு எழுந்து உணவு தயாரித்து காஷ்மீரி இஸ்லாமிய பெண்ணுக்கு நோன்பு உணவு வழங்குகிறார். இதுதான் தனித்தன்மை வாய்ந்த இந்தியாவின் கலாச்சாரம், இது இந்தியாவில் மட்டுமே நிகழும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஜம்மு, காஷ்மீர், இஸ்லாமிய பெண், காஷ்மீர் பண்டிட் ஆகிய கலைச் சொற்களை அடிப்படையாக வைத்து கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது இதுபற்றி வெளியான உண்மை கண்டறியும் ஆய்வு முடிவுகள் மட்டுமே நமக்கு கிடைத்தன. 

Facebook LinkArchived Link

இவற்றுக்கு நடுவே, படத்தை வெளியிட்டவரின் பதிவும் நமக்கு கிடைத்தது. இஸ்லாமிய பெண் உணவு சாப்பிடும் போது அருகில் நின்ற பெண்ணின் கணவர்தான் இந்த புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 ஏப்ரல் 25ம் தேதி வெளியிட்டது தெரிந்தது. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அந்த பெண்ணை தாக்கியதாக அதில் வேறு எந்த பதிவும் இல்லை.

https://twitter.com/Really_Hindu/status/1231637738056822787
Archived Link

ரத்தம் வடியும் பெண்ணின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் 2020 பிப்ரவரியில் குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. அந்த ட்வீட் பதிவில், “குஜராத்தில் இந்துக்களை தாக்கிய இஸ்லாமியர்கள்” என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் பிப்ரவரி 24ம் தேதி குஜராத்தி தொலைக்காட்சியில் வெளியான வீடியோவும் கிடைத்தது. 

இதன் மூலம் இரண்டும் வேறு வேறு சம்பவங்கள் என்பது உறுதியானது. இதன் அடிப்படையில் இஸ்லாமிய பெண்ணுக்கு உணவு வழங்கிய இந்து பெண்ணை ஆர்.எஸ்.எஸ் காவிகள் தாக்கினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

கூடுதல் தகவல்: இந்தியா டுடே வெளியிட்டிருந்த ஃபேக்ட் செக் கட்டுரையைப் பார்த்தபோது, உணவு வழங்கிய பெண்ணின் கணவரிடம் பேசியபோது, தாக்குதல் சம்பவம் என்பது வெறும் வதந்தி என்று உறுதி செய்ததாகவும், குஜராத்தில் பிப்ரவரி மாதம் தாக்கப்பட்ட பெண்ணின் மகனிடம் பேசி, தற்போது அவரது அசல் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இஸ்லாமியருக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்எஸ்எஸ் தாக்கியதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “இஸ்லாமியருக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்எஸ்எஸ் தாக்கியதாக பரவும் வதந்தி!

  1. Nalla oru aaraaichi karpanai unmai endrum aliyaathu indru vayndumaanaal fact checked n drum false news n drum chollee unmaiyai maraithu v dalaam

Comments are closed.