இந்த லைட் ஷோ வீடியோ ஜோத்பூரில் எடுக்கப்பட்டதா? முழு விவரம் இதோ!

சமூக ஊடகம் | Social

‘’ஜோத்பூரில் நிகழ்ந்த லைட் ஷோ ஒன்றின் வீடியோ,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

ஃபேஸ்புக் பதிவு லிங்க்… 

Facebook Claim LinkArchived Link

செப்டம்பர், 19, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், வண்ண மயமான வெளிச்சத்தில், டிராகன் உருவம் தோன்றி மறைவதையும், மக்கள் உற்சாக குரல் எழுப்புவதையும் காண முடிகிறது. இதனை இந்தியாவின் ஜோத்பூரில் நிகழ்ந்த லைட் ஷோ எனக் கூறி பகிர்ந்துள்ளதால், பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்: 

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவை நன்கு கவனித்தால், அதில் சீன போலீஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் நிற்பதைக் காண முடிகிறது. இது தவிர, இதில் இசைக்கப்படும் இசை, மக்கள் பேசுவது உள்ளிட்டவை சீனாவில் எடுக்கப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

எனவே, முதலில் நாம் ஜோத்பூரில் இத்தகைய லைட் ஷோ நடத்தப்படுகிறதா என தகவல் தேடினோம். அப்போது, அது வேறு விதமான லைட் ஷோ என்றும், இதுபோன்ற டிராகன் உருவங்கள் எதுவும் இல்லை; இந்த லொக்கேஷனுடன் முற்றிலும் மாறுபட்டதாகவும் உள்ளதைக் கண்டோம்.

ஜோத்பூரில் உள்ள Umaid Bhawan Palace இத்தகைய லைட் ஷோவுக்கு புகழ்பெற்றதாகும். அங்கு இதுபோல நிறைய லைட் ஷோக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், டிராகன் உருவத்துடனான லைட் ஷோ எதுவும் காண கிடைக்கவில்லை. அத்துடன், அந்த லொக்கேஷன் நாம் பார்க்கும் வீடியோவுடன் ஒத்துப் போகவும் இல்லை.

சமீபத்தில் கூட நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்தை ஒட்டி இங்கே லைட் ஷோ நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவையும் கீழே இணைத்துள்ளோம்.

ஆனால், நாம் பார்க்கும் வீடியோ காட்சிகள், ஒரு நீர் நிலையின் மீது மிக நீளமான கட்டுமானங்களின் பின்னணியில் படம்பிடிக்கப்பட்டதாக உள்ளது. இது ஜோத்பூர் அரண்மனை போல இல்லை. 

எனவே, இதில் உள்ள ஃபிரேம்களை பிரித்தெடுத்து தகவல் தேட தொடங்கினோம். அப்போது, சீனாவில் இதுபோன்ற லேசர் லைட் ஷோ நிறைய நடத்தப்படுவதாகவும், டிராகன் உருவம் கொண்ட வண்ண மயமான லைட் ஷோ அங்கு பிரபலம் எனவும் தெரியவந்தது.

இதே வீடியோவை கடந்த 2019ம் ஆண்டில் மலேசியாவில் இருந்து செயல்படும் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் சீன மொழியில் பகிர்ந்துள்ளனர். அதனை கீழே இணைத்துள்ளோம்.

Facebook Page Link

எனவே, 2019ம் ஆண்டில் சீன மொழியில் சீனாவில் நிகழ்ந்த லைட் ஷோ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட வீடியோவை எடுத்து, இந்தியாவின் ஜோத்பூரில் நிகழ்ந்ததாகப் பகிர்ந்து வருகின்றனர் என்று தெளிவாகிறது.

இதே வீடியோ பதிவை வியட்நாமைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர், சீனாவில் நிகழ்ந்தது எனக் கூறி 2020, ஜூலையில் பகிர்ந்திருக்கிறார். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Facebook Page Link

மேலும், சீனாவில் இதுபோல நிகழ்த்தப்படும் டிராகன் லைட் ஷோ பற்றிய வீடியோ தொகுப்புகள் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம்.

Video Link 1 I Video Link 2 I Video Link 3

எனினும், அசல் வீடியோ எப்போது வெளியானது என்ற விவரத்தை 2 நாட்களுக்கும் மேலாக, பல்வேறு மொழிகளில் எமது குழுவினர் விரிவாக தேடினோம்.

அதன் முடிவாக, இதுபற்றிய ஒரு செய்தி விவரம் கிடைத்தது. இந்த வீடியோ பல்வேறு மொழியிலும் பரவி வருவதால், இதுபற்றி சீனாவைச் சேர்ந்த இணையதளம் ஒன்றில் உண்மை கண்டறியும் சோதனை செய்து, அதன் முடிவை சமர்ப்பித்திருந்தனர். அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Piyao.org.cn LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) ஜோத்பூரில் டிராகன் லைட் ஷோ எதுவும் நடத்தப்படவில்லை. இது சீனாவில் நிகழ்ந்ததாகும்.

2) சீனாவில் நிகழ்ந்த லைட் ஷோ ஒன்றை எடுத்து, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயனாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். அது படிப்படியாக பல மொழிகளை கடந்து, தவறான தகவல் சேர்த்து, தமிழ் மொழியிலும் பகிரப்படுவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவைக் கண்டால் +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்த லைட் ஷோ வீடியோ ஜோத்பூரில் எடுக்கப்பட்டதா? முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: False