
குவைத் நாட்டில், வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாகவும் 80 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
குவைத் நாட்டின் வெப்பநிலை 63 டிகிரி …?
இன்னும் 80 டிகிரி வரை போகும்னு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது …
உருகிய நிலையில் உள்ள ஒரு போக்குவரத்து சிக்னல் கம்பம் காட்டப்பட்டுள்ளது. எந்த இடம், எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் அதில் இல்லை. நிலைத் தகவலில், குவைத் வெப்பநிலை 63 டிரிகி செல்ஷியஸ். இன்னும் 80 டிகிரி வரை செல்லும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படம் குவைத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.
இந்த பதிவை, 2019 ஜூன் 16ம் தேதி Dhivya Dharshini என்பவர் வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குவைத்தில் 63 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, டி.என்.ஏ நாளிதழில் குவைத்தில் 63 டிகிரி செல்ஷியஸ் பதிவானதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. 2019 ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்ட அந்த செய்தியைப் படித்தோம்.
இந்த பூமியிலேயே மிகவும் வெப்பமான பகுதி சவூதி அரேபியாவும் குவைத்தும் என்று தலைப்பிட்டிருந்தனர். இது மட்டும் உறுதியானால் உலகின் வெப்பமான பகுதி என்று வரலாற்று புத்தகத்தில் இது இடம் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
குவைத்தில் பகல் நேரத்தில் அதிகபட்சமாக 63 டிகிரியும் இரவில் 52.2 டிகிரியாகவும் வெப்பம் பதிவானதாக குறிப்பிட்டுள்ளனர். Gulf News வெளியிட்டிருந்த செய்தி அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அடுத்த மாதம் இது 68 டிகிரி வரை செல்லக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த செய்தியை அப்படியே தமிழாக்கம் செய்து ஒன் இந்தியாவில் வெளியிட்டுள்ளனர். அதனுடன் கூடுதலாக, இந்த அதிக வெப்பநிலை தொடர்பாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்றும் எழுதியுள்ளனர். ஒன் இந்தியா தமிழ் செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Gulf News-ல் இந்த செய்தி வெளியானது உண்மையா என்று தேடினோம். அதில் இந்த செய்தி வெளியாகி இருந்தது. ஜூன் 12ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டிருந்தனர். அதில், கடந்த சனிக்கிழமை குவைத்தில் 63 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக குறிப்பிட்டிருந்தனர். அதாவது, 2019 ஜூன் 8ம் தேதி இந்த வெப்பநிலை பதிவானதாக தெரிவித்துள்ளனர். ஆனால், Al Qabas என்ற நாளிதழ் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக Gulf News தெரிவித்துள்ளது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Al Qabas என்பது அரபி மொழியில் வெளியாகும் நாளிதழ் ஆகும். இதனால் அந்த செய்தியை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.
குவைத்தில் 63 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது உண்மைதானா என்று கண்டறிய, வானிலை இணையதளங்களுக்கு சென்று பார்த்தோம். குறிப்பிட்ட அந்த தேதியில் அதிகபட்சமாக 48 டிரிகி செல்ஷியசும் குறைந்தபட்சமாக 31 டிகிரி பதிவானதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மாதத்தில் சராசரியாக அதிகபட்சமாக ஜூன் 12ம் தேதி 50 டிகிரி செல்ஷியஸ் பதிவானது தெரிந்தது.

குவைத் வானிலை ஆய்வு மைய இணைய தளத்துக்கு சென்று பார்த்தோம். அதில், 19 இடங்களில் வானிலை மையத்தின் கணக்கெடுப்பு நடப்பதாக இருந்தது. குவைத் நாட்டிலேயே அதிகபட்சமாக, MITRIBAH என்ற இடத்தில் 2016ம் ஆண்டு ஜூலை 21ம் தேதிதான் அதிகபட்சமாக 54 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியதாக அதில் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் எந்தக் காலத்திலும் குவைத் வெப்பநிலை 54 டிகிரியைத் தாண்டி சென்றது இல்லை என்பது தெரிந்தது.

அடுத்த மாதத்தில் 80 டிகிரி செல்ஷியஸைத் தாண்டி வெப்பநிலை செல்லும் என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். வெப்பநிலை தொடர்பாக குவைத் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதா என்று தேடினோம். அது போன்ற எந்த எச்சரிக்கையும் அதன் இணைய தளத்தில் வெளியாகவில்லை.

நம்முடைய ஆய்வின்போது தொடர்ந்து குவைத் வெப்பநிலை பற்றியும் குவைத் சாலைகளில் உள்ள சிக்னல் விளக்குகள் உருகியதாகவும், மரங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் பல வதந்திகள் பரவியது தெரிந்து. வாகனம் தீப்பிடித்து எரிந்தபோது அருகில் இருந்த சிக்னல் கம்பம் உருகியுள்ளது. அந்த படத்தை எடுத்து 2013ம் ஆண்டில் இருந்தே இது போன்ற வதந்திகள் பரவி வருவதும் நமக்கும் தெரிந்தது. அந்த படத்தைத்தான் இந்த பதிவிலும் பயன்படுத்தியுள்ளனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

உலகில் எந்த பகுதியிலாவது 63 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். உலக வானிலை ஆய்வு மைய தகவல்படி அதிகபட்சமாக அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 1913ம் ஆண்டு 56.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதுதான் அதிகம் என்று இருந்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
1) குவைத்தில் 63 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதாக டிஎன்ஏ, கல்ஃப் நியூஸ், ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட இணைய தளங்கள் செய்தி வெளியிட்டது தெரிந்தது.
2) வெப்பநிலை தகவலை அளிக்கும் இணைய தளத்தில் குவைத்தில் இந்த மாதம் முழுவதும் பதிவான வெப்பநிலை நமக்குக் கிடைத்துள்ளது. அதில், எந்த இடத்திலும் 63 டிகிரி வெப்பநிலை பதிவானதாக இல்லை.
3) குவைத் நாட்டின் வானிலை ஆய்வு மைய இணைய தளத்தை ஆய்வு செய்ததில், குவைத் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 54 டிகிரி செல்ஷியஸ் பதிவானதாக குறிப்பிட்டுள்ளனர்.
4) வெப்பநிலை 80 டிகிரியைத் தாண்டும் என்று எந்த ஒரு எச்சரிக்கையையும் குவைத் வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை.
5) தொடர்ந்து பல ஆண்டுகளாக இதுபோன்ற வதந்திகள் பரவி வருவதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் குவைத்தில் உலகிலேயே அதிகபட்சமாக குவைத்தில் 63 டிகிரி வெப்பநிலை பதிவானது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முன்னணி இணைய செய்தி தளங்கள் தங்களுக்கு கிடைத்த தகவலை ஆய்வு செய்யாமல், சரி பார்க்காமல் அப்படியே பதிவிட்டதன் விளைவு, வதந்தி இன்னும் வேகமாகப் பரவியுள்ளது தெரிகிறது. தமிழ்நாட்டிலும் வெப்பம் அதிகமாக இருப்பதால் இந்த செய்தியை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:குவைத்தில் வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாம்! – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு
Fact Check By: Praveen KumarResult: False

Nice instructions. Thanks.