FACT CHECK: பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

குறிப்பிட்ட பதிவைக் காண… Facebook I Archive

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காந்தி தேசமே காவல் இல்லையா. BJPஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியா!! பெண் காவலருக்கே பாதுகாப்பின்மை இல்லா தேசமா இந்தியா!! பஞ்சாப் மாநிலத்தில் பெண் போலிஸ் கான்ஸ்டபிள் கூட்டு பாலியல் வன்புணர்வு உட்படுத்தபட்டு கற்பழித்து கொலை!!

Women police is also not safe in india. A women constable was raped in pujab india. rapists should be hanged ..lakh de lanth godi sarkar pe. Punjab Police @Nomi (Christian Girl) Rape & Murdered in Amritsar. Sad to hear that Indian Newspaper, Journalist, Social Media are silent on this 😓😢😥. JusticeforNomi” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Citizen Ian என்ற ஃபேஸ்புக் ஐடி நபர் 2020 அக்டோபர் 3 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உயிரிழந்து கிடக்கும் பெண் காவலர் படம் மற்றும் அவரது ஐடி கார்டு பகிரப்பட்டுள்ளது. சீருடையில் அவர் உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்று பிரச்னை வெடித்த நிலையில் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஸ்கார்ப்பியோ கார் மோதி பெண் காவலர் உயிரிழந்தார் என்று இந்த படத்துடன் கூடிய செய்திகள் நமக்குக் கிடைத்தன.

செய்தியைக் காண…tribuneindia.com I Archive 1 I jagran.com I Archive 2

அக்டோபர் 1ம் தேதி வெளியான tribuneindia செய்தியில் இந்த பெண் காவலரின் பெயர் நோமி என்றும், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அருகே தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் சென்ற போது எதிர்பாராத விதமாக ஸ்கார்ப்பியோ கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் எனக் குறிப்பிட்டிருந்தனர். அதில் அந்த பெண் காவலர் பெயர் நோமி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் இந்த பெயரைத்தான் குறிப்பிட்டிருந்தனர்.

அதே நேரத்தில், பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஹாத்ராஸ் சம்பவத்துக்கு கொந்தளித்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஏன் இதற்காக குரல் கொடுக்கவில்லை என்ற வகையில் பதிவிட்டு வருவதாக கூறி இந்த படத்தை பலரும் பகிர்ந்து வருவதாக கூறி செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவு பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் போலீசைத் தொடர்புகொண்டு இது பற்றி விசாரித்தனர். அப்போது பெண் காவலர் நோமி சாலை விபத்தில் உயிரிழந்ததை அவர்கள் உறுதி செய்ததுடன், முதல் தகவல் அறிக்கையையும் பகிர்ந்திருந்தனர். பஞ்சாபி மொழியிலிருந்த முதல் தகவல் அறிக்கையை மொழி மாற்றம் செய்து பார்த்த போது விபத்து காரணமாக உயிரிழந்ததாக அவரது சகோதரர் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.

இதன் மூலம் விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் படத்தை வைத்து தவறான தகவல் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், இவர் விபத்தில் பலியானவர் என்பதும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்ற தகவல் தவறானது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False