நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷ்க்கும் மோதல் என்று சமூக ஊடகங்களில் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சினிமா விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "லோகேஷ் விஜய் மோதல்!? லோகேஸ் இயக்கத்தில் விஜய் திரிஷா இணைந்து நடிக்கும் படம் லியோ. சமீபத்தில் லியோ படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷிடம் படத்தில் திரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சிகளும், படத்தில் ஒரு டூயட் சாங்கும் வேண்டும் என்று கூறியுள்ளார். கோபமடைந்த லோகேஷ் படத்தில் இருந்து விலகியதாகவும் படத்தின் 70 சதவீதம் குலுகுலு இயக்குனர் ரத்னா இயக்கி உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷ்க்கும் மோதல் என்பது போன்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. முன்பு விஜய் நடித்த பல படங்களிலும் கூட படப் பிடிப்பு நேரத்தில் இப்படி வதந்தி பரப்பப்பட்டு வந்துள்ளது. இந்த தகவல் உண்மையா பொய்யா என்பதை விஜய்யும் லோகேஷ்ம் தான் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் வெளிப்படையாக எதையும் அறிவிக்காத நிலை இந்த விவகாரத்திற்குள் நாம் செல்லவில்லை.

இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம். நியூஸ் கார்டில் எழுதப்பட்டுள்ள கதை விகடன் வெளியிடும் நியூஸ் கார்டுகளில் உள்ளது போல இல்லை. எனவே, இதை உண்மையில் விகடன் வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம்.

Archive

அதன் ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) பக்கங்களில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு சினிமா விகடன் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. மேலும் அதில், "இப்படி எந்த ஒரு செய்தியையும் விகடன் வெளியிடவில்லை!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷ்க்கும் மோதல் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று சினிமா விகடன் ஊடகம் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் மோதல் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

Written By: Chendur Pandian

Result: False